பக்கம்:புது மெருகு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

புது மெருகு

உடம்பில் ஒரு நடுக்கம் எடுத்தது, 'கடலுக்கு ஆகாரமாக வேண்டிய நாம் இவர்களுக்கு ஆகாரமாகவேண்டுமென்பது விதிபோலும்' என்று அவன் எண்ணினான்.

ஆனாலும் அவர்களோடு அவர்கள் பாஷையிலே பேசிப் பார்த்தால் ஏதாவது நன்மை உண்டாகுமோ என்று ஒரு சபலம் தட்டியது. "பெரியவர்களே! நீங்கள் யார்?" என்று மெல்லிய தொனியில் பணிவோடு அவன் கேட்டான்.

பாசி நிறைந்த குளத்தில் கல்லைப் போட்டால் திடீரென்று அந்தப் பாசி விலகிவிடுவதுபோல இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவர்கள் திடீரென்று விலகிக் கொண்டார்கள். மறுபடியும் மொய்த்துக்கொள்ளவில்லை. அவர்கள் முகத்தில் ஆச்சரியக்குறி தோற்றியது. அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள். 'நம்முடைய பாஷையை இவன் பேசுகிறான்! இவன் யாரோ! இவனைத் துன்புறுத்தக் கூடாது' என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாயிற்று. தாய் மொழியின் அன்பு அந்தக் காட்டுமிராண்டி ஜனங்களீடத்தில்கூட இருப்பதைச் சாதுவன் அறிந்து வியந்தான். அப்பால் சிறிது கம்பீரமாகவே பேசத் தொடங்கினான்.

"சகோதரர்களே! நீங்கள் யார்?" என்று மறுபடியும் கேட்டான்.

"நாங்கள் இங்கே இருக்கும் நாகர்கள்" என்று விடை வந்தது.

அதற்குள் ஒருவருக்கொருவர் ஏதோ பேசலானார்கள். சிறிது நேரங் கழித்து அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன், "நீ எங்களுடன் வா. அவரிடம் அழைத்துப் போகிறோம்" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/67&oldid=1549159" இலிருந்து மீள்விக்கப்பட்டது