பக்கம்:புது மெருகு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

புது மெருகு

மேல் காயாம்பூப் பூத்தாற்போலத் தனி கிடக்கும் கண்ணன் திருவழகைப் புலவர்களெல்லாம் பாராட்டுகிறார்கள். அந்தப் பாடல்களின் நயத்தை அறிஞர்கள் சுவைத்துச் சுவைத்து மகிழ்கிறார்கள். இங்கே ஒரு தோப்பிலே தனித்து ஓங்கி நின்ற மூங்கிலின் மேலே ஓர் இலையில் அந்தக் கண்ணனைப்போலத் தூங்குகின்ற பனிநீரை ஏற்றக்காரன் பாட்டு, சிறிய சொற்களாலே சித்திரிக்க, அந்தச் சித்திரம் கம்பருடைய உள்ளக் கிழியிலே நன்றாகப் பதிந்துவிட்டது.

அந்த அடியை மீட்டும் நினைந்து மகிழ்ந்தார். அப்படி மகிழ்வதற்கு அவகாசம் கொடுத்தான் ஏற்றக்காரன். அவன் அந்த அடியைத் திருப்பித் திருப்பிப் பல முறை பாடினான். நடுவிலே ஏற்றச் சாலின் கணக்கைச் சொன்னான். 'சவுக்க காலத்திலே' அவனுடைய சங்கீதம் தவழ்ந்ததால் கம்பர் ஒவ்வொரு சொல்லாகச் சுவைத்துப் பார்க்க முடிந்தது. ஆனாலும் 'அடுத்தபடி என்ன வரப்போகிறது?' என்ற ஆவலும் அவருடைய உள்ளத்தில் ஒரு வேகத்தை எழுப்பியது. பெரும் புதையலுக்கு முன்னே ஒரு பேராசைக்காரனை விட்டால் கை கொண்ட மட்டும் வாரிக்கொள்ள ஓடுவானே, அப்படித் துடித்தது அவர் உள்ளம். ஏற்றக்காரனோ நின்று, நிதானமாகச் சங்கதி போடாமலே பாட்டைத் திருப்பித் திருப்பிச் சொன்னான். 'அடுத்த அடி எப்பொழுது வரப்போகிறதோ?' என்று ஏங்கி நின்றார் கம்பர். 'ஒருகால் இவனுக்குத் தெரியவே தெரியாதோ! பாட்டு இவ்வளவோடு முடிந்து போகிறதோ?' என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்த கம்பரைக் கிள்ளி உணர்ச்சி வரச் செய்தது ஏற்றக்காரனுடைய குரல். அவன் அடுத்த அடியைப் பாடினான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/81&oldid=1549289" இலிருந்து மீள்விக்கப்பட்டது