பக்கம்:புது மெருகு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெடுஞ் சுவர்

சோழனுடன் ஏற்பட்ட மன வேறுபாட்டால் கம்பர் தம்முடைய கவிதையே துணையாகப் புறப்பட்டு விட்டார்.'எங்கே போவது? என்ன செய்வது?' என்ற தீர்மானம் இல்லாமல் அகில லோகமும் தமக்கு அடிமையென்ற நினைவு கொண்டவரைப் போலச் சோழநாட்டை விட்டு வடக்கே பிரயாணம் செய்யத் தொடங்கினார். அவருடைய புகழ் தமிழ்நாடு முழுவதும் அக் காலத்தில் பரவியிருக்கவில்லை. அவருடைய பெயரை அழியாமல் நிலைத்திருக்கும்படி செய்யும் இராமாயணத்தை அவர் இயற்றாத காலம் அது.கட்டிளமை நிறைந்த பருவத்தில் துணிவும் சுதந்தர உணர்ச்சியும் அவரிடம் இருந்தன.

"இந்த உலகத்தில் உன்னை நினைந்தா தமிழை ஓதினேன்? உலகம் முழுவதுமே சோழ நாடா? வேறு தேசங்களும் அத் தேசங்களுக் குரிய மன்னர்களும் இல்லாமல் உலகம் அஸ்தமித்து விட்டதா? நான் எங்கே போனாலும் என் புலமைச் செங்கோலின் அதிகாரத்தைச் செலுத்த முடியும்" என்று சோழனிடம் வீரம் பேசி வெளியேறினார் அப்புலவர் பிரான். சோழ நாட்டை விட்டு அப்பால் போனபோதுதான் உண்மையான உலகம் அவர் கண்ணுக்குப் புலனாயிற்று. அவர் தன்னந் தனியாகப் புறப்பட்டிருக்கிறார். மாணாக்கர்களோ, தோழர்களோ யாரும் துணை இல்லை. அவரை இன்னார் என்றே பலர் அறிய முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/87&oldid=1549350" இலிருந்து மீள்விக்கப்பட்டது