பக்கம்:புது வெளிச்சம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாயிலாய்க் இக்குறிக்கோளின் அவசியத்தை நமக்குப் புரியும்படிச் செய்துவிடுகிறார்.

'என்னுடைய புன்செய் நிலத்தில் ஒர் இலந்தை மரம் இருக்கிறது. அது முழுவளர்ச்சியடைந்து பார்க்கத் தகுந்த தோற்றமுடன் வட்டமான கூடாரம் போல் கிளையும், கோடும், விளார்களுமாய் விரிந்து மரகதக் காயும் பவளக் கனியுமென வரிசை வரிசையாய்க் காய்த்து கனிந்து தன்னிடம் வைத்துக் கொண்டு காத்திருந்தது.

ஒரு காலைப் பொழுது, அந்தக் கனிகளைச் சுவைத்துத் தின்னப்பற்பல பறவைகள் வந்து அதில் கூடியிருந்தன. செவ்வெறும்புக் கூடுகள் சிலவும் அதில் காணப்பட்டன. அதே நேரத்தில் ஆணும் பெண்ணுமாக ஊர்க் குழந்தைகளும் அங்கு உதிர்ந்து கிடக்கும் நல்ல பழங்களைப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டும், தின்று கொண்டும் குழுமியிருந்தனர். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த இலந்தை மரம் என் பிறப்பு மகத்தான தாயிற்று என்னால் பல சீவன்கள் குதுகலிக்கின்றன பயன்படாமல் சில மனிதர்கள் வெறுமையாய் வாழ்வதில் என்னதான் இருக்கிறது! என்று தனக்குத்தானே எண்ணிப் புளகாங்கிதம் முற்றது!’ என்கிறார்.

பரோபகாரம் இதம் சரீரம் இந்த நம் உடலுக்கு நலம் தரத்தக்கது, உணவினைக்காட்டிலும் பிறருக்கு உதவியாயிருப்பது தான் என நாட்டில் வழங்கிவருகிறது. செல்வம் தேடும் வாய்ப்புள்ளவர்களில் ஒரு சிலர், "செல்வத்தினால் பெற்று நுகரவேண்டிய ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல்” என்று, வள்ளுவர் கூறிப் பரிந்துரை செய்தார் போலும்.

சிந்தித்துத் தெளியாத உள்ளம், நீரில் தோய்த்துத் துவைக்காத் துணியைப் போன்று என்றும் மலினமானதாகவே இருக்கும். காண்பனவும், கேட்பனவும் கொண்டே வாழும் ஒரு மனிதனின், அவன் யாராகவேனும் இருக்கட்டும், வாழ்வு மலின முள்ளதாகவே இருக்கும். ஆம் ! அது வெறும் சோற்றுக்காக வாழும் பாவனை வாழ்க்கைதான்.

'உழைப்பென்று, உணவென்று' என வாழும் அப்பாவிகளைப் பற்றி நான் இங்கு எதுவும், கூற விரும்பவில்லை; பணம் தேடுவது

2

கவிஞர் வெள்ளியங்காட்டான்