பக்கம்:புது வெளிச்சம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உபநிசத்து விளக்குகிறது: 'தத்யத்-தத்-சத்ய-மசெளன சதித்யோ' என்று. இதன் தமிழர்த்தம் என்னவென்று புரிகிறதா? அந்தச் சத்தியம் எதுவோ அதுதான் இந்த ஆதித்யன், என்பதேயாம்.

இந்த உதய ஞாயிறினை சத்தியத்தை உன்னுடைய இதய வானத்தில் உதிக்க வைத்துக்கொண்டால் நீ சுயம் பிரகாசமுள்ள வனாகிவிடுகிறாய். உனக்கு முன் எந்த ஒரு அறியாமை இருளும் எதிர்த்து நிற்க இயலாது என்பதை உணர்ந்து கொள் - இதனைப் பரமார்த்தம் உண்மை, ஞானார்த்தம், தேவ அறிவு, மெய்மை என அகராதி விவரிக்கிறது. எனவே, இந்தச் சத்தியம் அணுவினை விடச் சூக்குமமானது. இந்தச் சத்திய நியதியில் தான் எல்லா உலகங்களும் நிலைபெற்றுள்ளன. ஆகவே, இந்தச் சத்தியமே பிரம்மம் - கடவுளுமாகிறது. இந்தத் தெய்வீக சக்தியே உன்னுடைய உயிரும் அதுவே வாக்கும், மனமும், ஆயிற்று. அதே சத்தியம் அமிர்தமும் ஆகி உன்னை அமரன் - மரணமற்றவனாக - நிலை பேறுள்ளவனுமாக ஆக்கிவிடுகிறது. சத்தியத்தை அமாவாசையாக்கி விட்டு இன்று நாமனைவரும் இருட்டில் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

சத்தியத்தின் சக்தி எத்தகையது என்று புரிந்துகொள்ள ஒரு சின்னஞ்சிறியகதையும் அதே உபநிசத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதையும் ஊன்றிப் படித்துணர இங்கு விவரிக்கப்படுகிறது. நண்பனே! உன்னிடமுள்ள அசிரத்தையே உன்னுடைய பரம விரோதி. எனவே, சிரத்தையோடு படித்தறிந்து கொள்.

சத்தியகாமன் எனும் சிறுவன் ஒருவன் தன் தாயாகிய ஜாபாலவை அணுகி, "அம்மா, பிரம்மாச்சாரியாக நான் குருகுலம் சென்று வசிக்க விரும்புகிறேன். நான் என்ன கோத்திரம்”, என்று வினவினான்.

"அப்பா! நீ என்ன கோத்திரம் என்று நான் அறியாதவளாயுள்ளேன். என் யெளவனத்தில், நான் பலவிதமான பணிகளில் பலரிடம் சேவை செய்து கொண்டிருக்கும் காலத்தில் உன்னை ஈன்றெடுத்தேன். ஆகவே உன்தந்தை யார்? அவர் கோத்திரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள இயலவில்லை, என் பெயர் ஜாபாலா, உன் பெயர் சத்தியகாமன் எனவே சத்தியகாம ஜாபாலன் என்றே நீ குருவினிடம் சொல்”லெனக் கூறி அனுப்பினாள்.

புது வெளிச்சம்

ᗍ 23