பக்கம்:புது வெளிச்சம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருணை கூர்ந்தளித்த இதோ இந்த ஒரு உபதேசத்தை ஊன்றிப் பார்த்தால் வயிறு எரியவும் செய்கிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் இந்நால்வரையும் நாம் உயிருள்ளவரை மறக்காமல் சதா உள்ளத்தில் வைத்துப் போற்ற வேண்டும் என்பதுதான் அந்த உபதேசம்.

முதலில் இது என் செவியில் விழுந்தபோது எனக்கு வயது ஐந்தும் கூட முடிந்திருக்காது. மிகச் சாதாரணமான ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்றவர்களிலிருந்து, இன்று தமிழ் நாட்டில் மிகமிக மேன்மையான நிலையில் உள்ள பிரபுக்கள், புலவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், இலக்கியக் கர்த்தாக்கள் வரை இந்த உபதேசம்பெறாதவர்கள், பெற்று நம்பாதவர்கள் ஒரே ஒரு ஒற்றைப் பிராணி கூட இருக்கமுடியாது என்று நான் சொன்னால் இந்து மதத்தினராயுள்ள ஒருவரும் மறுக்கவேமாட்டார்கள்.

ஆனால், இந்த மாதா, பிதா, குரு, தெய்வ உபதேசத்தில், உண்மை எத்தனை சதவிகிதம்? புனைகருட்டு, நய வஞ்சகம் எத்தனை சதவீகிதம்? என்று தெரிந்துகொள்ள எனக்கு முக்கால் நூறு வருடங்கள் வாழ்ந்து முடிந்த பின்தான் சமயம் கிடைத்தது என்றும் சொல்லிவிடுகிறேன்.

மாதாவைப் போற்ற வேண்டும்; பிதாவைப் போற்ற வேண்டும்; குருவைப் போற்ற வேண்டும்; தெய்வத்தைப் போற்ற வேண்டும் எனக் கனமான அர்த்தம், நயமான சொற்றொடர்கள். கேட்டவர் ஒத்துக்கொண்டே தீரவேண்டிய சாதுர்யமான உபதேசம் இது.

உபநிசத்திலிருந்து நமக்கு கிடைத்த ஒரே ஒரு உபதேசம் இதுதான் என்று என்னால் அறிய முடிகிறது. ஆனால், தலையில்லா முண்டத்துக்கு வேறு பிராணியின் தலையைப் பொருத்தி வீதியில் நடமாட விட்ட தோற்றம்தான் இந்த மாதா, பிதா, குரு, தெய்வமெனும் சொற்றொடர்களின் தோற்றமும்.

இந்த மாதா, பிதா, குரு, தெய்வத்தின் பூர்வீகர், தைத்திரியோ உபநிசத்தில் காணப்படும். விதம் “மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! ஆசார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ” என்று. இவற்றின் பொருள் உபநிசத்தில் உள்ளபடி தாயைத் தெய்வமாகக் கொண்டிரு தகப்பனைத் தெய்வமாகக் கொண்டிரு குருவைத் தெய்வமாகக் கொண்டிரு எதிர்பாராதவாறு நம் வீட்டிற்குப்-

புது வெளிச்சம்

67