பக்கம்:புது வெளிச்சம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொந்த நிலமும் இல்லாத, கல்வியின் அவசியமும் அறியாத விவசாயக் குடிமகனாகப் பிறந்தபின் கூலிசெய்வது தவிர வேறு என்ன செய்ய முடியும் ? கூலிக்காரன் இனத்தானாயிருப்பினும் நிலச் சொந்தக்காரன் சமத்துவம் தருவானா? ஆங்கிலத்தில் தன் கையெழுத்தை மட்டும் போடக் கற்றுக்கொண்டவன், சாவடியில் மண்ணில் தமிழ் எழுத்துகளை எழுதி மூன்றாம் வகுப்புடன் படிப்பு முடித்து கொண்ட என்னைச் சகோதரனாகத்தான் பாவிப்பானா? எனவே நான், சுதந்திரனாக வாழவே முடியவில்லை.

சமத்துவம், சகோதரத்வம், சுதந்திரம் இம்மூன்றும் உறையுளும், உடையும், உணவும் போன்று மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் இன்றியமையாததல்லவா? எனினும் இந்த நாட்டில் என்னைப் போன்ற அடிமட்டத்தில் மாட்டிக் கொண்டுள்ள எவருக்குமே இவைகள் கிடைக்கவில்லை.

இந்த நாட்டில் இம்மூன்றும் எப்போதுமே இருந்ததில்லையா? லட்சோப லட்சம் ஆண்டுகளாக எனக்குமுன் வாழ்ந்த ஏழை மக்களனைவரும் இவைகளில்லாமலேதான் வாழ்ந்தனரா? என்று நான் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

நான் வசித்த ஊரில், ஒருநாள், கயல் முள்ளன்ன நரை முதிர்திரைகவுள் பயனில் மூப்பினையுடைய சிலர் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் கேட்கும் சமயம் எனக்குக் கிடைத்தது. இது எதிர்பாராமல் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு எனவே ஒர்ந்து கேட்டேன்.

அந்த வார்த்தைகள் முதலில் யாரோ, யாரிடமோ எந்தக் காலத்திலோ, எந்தச் சந்தர்ப்பச் சூழ்நிலையிலோ சொல்லப்பட்டு அது உண்மையென நம்பித் தெரிந்தவர் தெரியாதவர்களுக்குச் சொல்ல இவ்வாறே தொன்று தொட்டுப் பிறந்த மேனியாய் என் வாலிபகாலமான அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்வரை (இப்போது எனக்கு வயது 82) வழங்கி வந்தவைகள் அந்த அபூர்வமான - அர்த்தமற்ற வார்த்தைகள் தான் அவைகள்.

அவையாவன பிரம்மத்தின் சிரசிலிருந்து பிறந்தவன் பிராமணன்; பிரம்மத்தின் மார்பிலிருந்து பிறந்தவன் சத்திரியன்; பிரம்மத்தின் வயிற்றிலிருந்து பிறந்தவன் வைசியன் பிரம்மத்தின் தொடையிலிருந்து பிறந்தவன் சூத்திரன், என்பன.

புது வெளிச்சம்

73