இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30. பெளத்த சங்கம் சத்திய மார்க்கத்திலே செல்லத் தீர்மானிக்கும் ஒரு மனிதன் தனித்து நின்றால், அவன் வலிமை குன்றித் தன் பழைய பழக்கங்களுக்கே திரும்பிவிடக் கூடும். ஆதலால் நீங்கள் ஒன்று சேர்ந்து இருங்கள். ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளுங்கள், ஒருவர் முயற்சிகளை மற்றவர்கள் பலப்படுத்துங்கள். '
சகோதரர்களைப்போல இருங்கள்: அன்பில் ஒன்றாகவும், துறவறத்தில் ஒன்றாகவும், சத்தியத்தை நாடும் ஆர்வத்தில் ஒன்றாகவும் இருங்கள்." உலகின் திசைகளிலெல்லாம் சத்தியத்தையும் தருமத்தையும் பரப்புங்கள்; முடிவில் சகல ஜீவன்களும் தரும ராஜ்யத்தின் குடிகளாக இருக்கும்படி செய்யுங்கள். '
இதுவே புனிதமான சங்கம்; இதுவே புத்தரின் சங்கம்; புத்தரைச் சரணடைந்துள்ளவர் அனைவர்க்கும் ஒருமைப்பாட்டை அமைக்கும் சங்கம் இதுவே!" சகோதரர்களே! நான் சகல பந்தங்களிலிருந்தும் விடுதலை பெற்றுள்ளேன். மானிட இயல்புக்கு மேற்பட்ட பந்தங்கள், மானிடப் பந்தங்கள், யாவற்றிலிருந்தும் விடுதலையடைந்துள்ளேன். சோதரர்களே, நீங்களும் அமானுஷ்யமான பந்தங்கள், மானிடப் பந்தங்கள் - யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கிறீர்கள். சோதரர்களே, பல்லோருடைய நன்மைக்காகவும், பல்லோருடைய பேரின் பத்திற் காகவும், உலகின்மீது கருணை கொண்டு, தேவர்கள், மனிதர்கள் (யாவருடைய) சுகத்திற்காகவும், நன்மைக்காகவும், இன்பத்திற்காகவும் நீங்கள் வெளியே புறப்பட்டுச் செல்லுங்கள்! " எந்த இருவரும் சேர்ந்து செல்லாதீர்கள். சோதரர்களே, தொடக்கத்தில் இனிதாயும், நடுவில் இனிதாயும், முடிவில் இனிதாயும் உள்ள தருமத்தைப் பிரகடனம் செய்யுங்கள். பூரணமாக நிறைவு பெற்றுள்ள பரிசுத்தமான தரும வாழ்வின் அம்சங்களையும், அவற்றின் உட்பொருளையும் நீங்கள் தைரியப்படுத்துங்கள். காமவெறி முதலிய மண்ணினால் அதிகம் மறைக்கப் பெறாத கண்களையுடைய மக்கள் இருக்கின்றனர். தரும உபதேசத்தைச் செவியுறாமல் அவர்கள் நசித்துக் கொண்டிருக்கின்றனர். சிலராவது புரிந்துகொள்வர். (3)
88 / புத்தரின் போதனைகள்