பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 / புத்தரின் வரலாறு

"மகாராசரே! தாங்கள் கூறுவது தங்களுடைய பரம்பரை. நமது பரம்பரை என்றால், தீபாங்கரர், கொண்டஞ்சர் முதலான புத்தர்களுடைய பரம்பரை, அந்தப் புத்தர்களும் அவர்களுக்கு முன்பிருந்த ஆயிரக்கணக்கான புத்தர்களும் பிக்ஷையாசித்து வாழ்ந்தார்கள்" என்று அருளிச் செய்தார்.

பிறகு, அரசர் பகவன் புத்தர் கையிலிருந்து பிக்ஷா பாத்திரத்தைத் தமது கையில் வாங்கிக்கொண்டு புத்தரையும் பிக்கு சங்கத்தாரையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். சென்று அரண்மனையிலே எல்லோருக்கும் உணவு கொடுத்து உண்பித்தார். உணவு சாப்பிட்டான பிறகு பகவர், அரசருக்கு அனுமோதனா உபதேசம் செய்தார். அதனைக் கேட்ட அரசர் சக்ருதாகாமி நிலையை அடைந்தார். அவருடன் இருந்து உபதேசம் கேட்ட பிரஜாகௌதமியும் ஸ்ரோதாபத்தி நிலையைப் பெற்றார்.

யசோதரையார்

யசோதரைத் தேவியார் பகவன் புத்தரைப் பார்க்க வரவில்லை. பகவன் புத்தர், தமது பிக்ஷை பாத்திரத்தைச் சுத்தோதன அரசரிடம் கொடுத்து யசோதரையாரிடம் கொண்டுபோகச்சொல்லி தாமும் அவரைப்பின் தொடர்ந்தார். பகவன் புத்தர் தமது இருப்பிடத்திற்கு வருவதையறிந்த யசோதரையார் எதிர்சென்று, அவர் பாதத்தில் வீழ்ந்து வணங்கி அவருடைய இரு பாதங்களையும் பிடித்துக் கொண்டு அழுதார். புத்தர், யசோதரையாரைத் தமது மகள் போலக் கருதி வாளா இருந்தார். பிறகு யசோதரையாரின் மனம் தன்வயப்பட்டபோது சுத்தோதன அரசரையும் பகவன் புத்தரையும் கண்டு வெட்கங்கொண்டு எழுந்து மௌனமாக இருந்தார்.

அப்போது சுத்தோதன அரசர், பகவன் புத்தரிடம் இவ்வாறு கூறினார். "சுவாமி! தாங்கள் ஆடையணிகளை நீக்கிக் காவி உடை தரித்ததைக் கேட்டு என் மருமகளும் ஆடை அணிகளைக் கழற்றிவிட்டுக் காஷாய ஆடை அணிந்தார். ஒரு நாளைக்கு ஒரே வேளை உணவு உண்டார். தாங்கள் விலையுயர்ந்த ஆசனங்களை நீக்கிச் சாதாரண ஆசனத்தில் அமர்வதைக்கேட்டு இருவரும் சாதாரண ஆசனத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டார். அரச போகங்களை எல்லாம் நீக்கி ஒரு துறவியைப்போலவே வசித்து வருகிறார்" இவ்வாறு யசோதரைத் தேவியாரைப் பற்றிச் சுத்தோதன அரசர் கூறியதைக் கேட்ட பகவன் புத்தர் அப்போது அவர்களுக்குச் சந்திர கின்னர ஜாதகக் கதையை உபதேசம் செய்தார்.