பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 / புத்தரின் வரலாறு

அப்போது பகவன் புத்தர், "ததாகதரிடம் உள்ள குருபக்தி காரணமாக உங்களுக்குள்ள ஐயப்பாடுகளை நேரில் கேட்க நீங்கள் அச்சப்படுவதாக இருந்தால்., நண்பர்களுக்கு நண்பர்களாக உங்களுக்குள்ளேயே சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று அருளிச் செய்தார்.

அப்போதும் பிக்குகள் வாளா இருந்தார்கள். அப்போது அனந்தமகா தேரர் பகவரை நோக்கி, "பகவரே! அதிசயம், மிக அதிசயம். இந்தப் பிக்ஷு சங்கத்திலே புத்த, தர்ம, சங்கங்களைப் பற்றி யாருக்கும் எந்தவிதமான ஐயமும் இல்லை" என்று கூறினார்.

"ஆனந்த! இந்த ஐந்நூறு பிக்குகளில் எல்லோரும் நிர்வாண மோக்ஷம் அடைவார்கள். நிர்வாண மோக்ஷம் அடையாத பிக்குகள் இந்தச் சங்கத்தில் இல்லை" என்று அருளிச் செய்தார். அதன் பிறகு பகவன் புத்தர் பிக்குகளைப் பார்த்துக் கூறினார். "பிக்குகளே! ஐம்பூதஙக்ளின் சேர்க்கையால் உண்டான பொருள்கள் அழிந்துவிடும் என்னும் உண்மையைத் தவிர ததாகதர் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. ஆகவே, நிர்வாண மோக்ஷம் பெறுவதற்கு ஊக்கத்தோடும் உறுதியோடும் முயற்சி செய்யுங்கள்" என்று அருளிச் செய்தார். இதுவே பகவரின் கடைசி போதனையாகும்.

புத்தரின் பரி நிர்வாணம்

பிறகு பகவன் புத்தர் தியானத்தில் அமர்ந்து முதல் நிலையையடைந்தார். பிறகு, முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலையையடைந்தார். இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலையையடைந்தார். பின்னர் மூன்றாம் நிலையிலிருந்து நான்காம் நிலையையடைந்தார். அந்நிலையிலிருந்து எல்லையற்ற வெளியை யடைந்தார். அந்நிலையிலிருந்து சூனிய நிலையை யடைந்தார். பிறகு அந்நிலையிலிருந்து அதற்கு மேற்பட்ட நிலையை யடைந்தார்.

அப்போது ஆனந்த மகாதேரர் அனுருத்தமகாதேரரிடம் "அனுருத்த தேரரே, பகவன் புத்தர் நிர்வாணமோக்ஷம் அடைந்தார்" என்று கூறினார்.

"இல்லை.ஆனந்த தேரரே; பகவன் புத்தர் இன்னும் நிர்வாணமோகம் அடையவில்லை. அவர் தியானத்தில் மிக உயர்ந்த எல்லையில் இருக்கிறார்" என்று அனுருத்தர் கூறினார்.

அப்போது பகவன் புத்தர் யோகத்தின் மிக உயர்ந்த நிலையிலிருந்து படிப்படியாக கீழிறங்கி நான்காம் நிலைக்கு வந்து, அதிலிருந்து