பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 135

தீயவர்களோடு நேசம் செய்யாதே. அற்பர்களோடு இணங்காதே. நேர்மையுள்ள நல்லவர்களோடு நட்புக்கொள். மேன்மக்களோடு சேர்ந்து பழகு.

பயனற்ற ஆயிரம் செய்யுள்களைப் படிப்பதைவிட, மன அமைதியைத் தருகிற ஒரே ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது. மன அமைதியைத் தருகிற ஒரு செய்யுளானது, பயனற்ற ஆயிரம் செய்யுள்களைவிட மிக மேலானது.

முயற்சி இல்லாமல் சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையைவிட, ஆற்றலோடும் ஊக்கத்தோடும் முயற்சி செய்கிற ஒருவருடைய ஒருநாள் வாழ்க்கை மேன்மையுடையது.

உத்தம தர்மத்தை அறிந்த ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கையானது. அவ்வுத்தம தர்மத்தைக்காணாத ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையைவிட மேலானது.

சாவு வராமல் தடுத்துக்கொள்ள இவ்வுலகத்திலே ஆகாயத்திலாயினும், கடலின் நடுவிலாயினும், மலைக் குகைகளிலாயினும் ஒளிய இடம் இல்லை.

யாரிடத்திலும் கடுஞ்சொற்களைப் பேசாதே. கடுஞ்சொல் பேசியவர் கடுஞ்சொற்களால் தாக்கப்படுவர். சுடுசொற்கள் மெய்யாகவே துன்பந்தருகின்றன. அடிக்கு அடி திருப்பி அடிக்கப்படும்.


கல்வி, அறிவு இல்லாத ஆள் எருதைப்போன்று வளர்கிறான். அவனுடைய சதை வளர்கிறது; அவன் அறிவு வளரவில்லை.

இளமையிலே தூயவாழ்க்கையை மேற்கொள்ளாதவரும் செல்வத்தைத் தேடிக் கொள்ளாதவரும் தமது முதுமைக் காலத்தில், மீனில்லாத குளத்தில் இரைதேடிக் காத்திருக்கும் கிழக் கொக்கைப்போலச், சோர்ந்து அழிவார்கள்.

ஒருவர் முதலில் நம்மை நல்வழியில் நிறுத்திக்கொள்ள வேண்டும். பிறகுதான் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இத்தகையவர் நிந்திக்கப்படமாட்டார்.

நீயே உனக்குத் தலைவன், உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவராகக் கூடும்? ஒருவர் தன்னைத் தானே அடக்கி ஒழுகக் கற்றுக் கொள்வாரானால், அவர் பெறுதற்கரிய தலைவரைப் பெற்றவர் ஆவார்.