பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 13

"உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி
வலம்படு மருங்குல் வடுநோ யுருமல்
ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்
ஈன்றோள் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்"[1]

மாயாதேவியார்காலஞ்சென்றபடியினாலே அவர் தங்கையாராகிய மகாபிரஜாபதி கௌதமி என்பவர் சுத்தோதன அரசருடைய பட்ட மகிரிஷியானார்.இவர்தான் சித்தார்த்த குமாரனை வளர்த்தார். தமது அரச குலத்திலே பிறந்து நல்ல குணங்களும் நல்ல அழகும் உடைய ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து அவளைச் செவிலித் தாயாக அமைத்துக் குழந்தையை நல்லவண்ணம் வளர்க்கும்படி அரசர் ஏற்பாடு செய்தார். சித்தார்த்த குமாரன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரண்மனையிலே வளர்ந்து வந்தார். இவ்வாறு சில ஆண்டுகள் கழிந்தன.

நாஞ்சில் விழா

அக்காலத்திலே வப்பமங்கலம் என்னும் நாஞ்சில் விழா கொண்டாடுவது வழக்கம். அவ்விழாவன்று அரசரும் அமைச்சரும் வயலுக்குச் சென்று ஏரினால் நிலத்தை உழுவார்கள். ஓர் ஆண்டு வப்பவிழாவைக் கொண்டாடுவதற்காக சுத்தோதன அரசர், அமைச்சரும் பரிவாரங்களும் சூழ்ந்துவர, அலங்கரிக்கப்பட்ட நகர வீதிகளின் வழியாக, இளம் பிள்ளையாகிய சித்தார்த்த குமாரனுடன் சிவிகையில் அமர்ந்து வயற்புறத்திற்குச் சென்றார். சென்று, அங்கே நாவலந்தோப்பில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் சித்தார்த்த குமாரனைச் செவிலித் தாயரோடு இருக்கச் செய்து, அமைச்சருடன் வயலுக்குப் போனார். வயலுக்குப் போய் அரசர் பொன் கலப்பையினால் அமைச்சர்கள் வெள்ளிக் கலப்பைகளினாலும் நிலத்தை உழுதார்கள். நூற்றெட்டுக் கலப்பைகளினாலே நிலங்கள் உழப்பட்டன. குடிமக்கள் வெள்ளாடை அணிந்து, மலர் மாலைசூடி. வயலைச் சுற்றிலும் நின்று அரசர் ஏர் உழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சித்தார்த்த குமாரனுடைய செவிலித் தாயர்களும் இந்தக் கொண்டாட்டத்தைக் காண்பதற்காகக் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அவ்வமயம் சித்தார்த்த குமாரன், தன் அருகில் ஒருவரும் இல்லாததைக் கண்டு, பதுமாசனம் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார். அதாவது அநாபான ஸ்மிருதி (மூச்சை நிறுத்தல்)


  1. விம்பசார காவியம்