பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 / புத்தரின் வரலாறு

திண்டுகளும், போர்வைகளும் ஆடைகளும் கம்பளிகளால் ஆனவை. கார்காலத்தின் குளிர் தோன்றாதபடி அமைந்திருந்தது இந்த மாளிகை.

சுரம்மிய மாளிகை

வேனிற்காலத்தில் தங்குவதற்காக அமைக்கப்பட்டது சுரம்மியம் என்னும் பெயருடைய மாளிகை. இந்த மாளிகை ஐந்துமாடிகளைக் கொண்டிருந்தது. வேனிற் காலத்துத் தென்றல் காற்று வீசுவதற்குத் தக்கவாறு இந்த மாளிகையின் கதவுகளும் சாளரங்களும் அமைந்திருந்தன. சுவர்களிலே செந்தாமரை, வெண்டாமரை, நீலத்தாமரை, செவ்வல்லி, வெள்ளல்லி முதலிய நீர்ப்பூக்கள் குளங்களில் மலர்ந்திருப்பது போன்ற ஓவியங்கள் அழகாக எழுதப்பட்டிருந்தன. இந்த மாளிகையிலே இருத்த தலையணைகளும், பஞ்சணைகளும், உடுத்தும் ஆடைகளும், போர்க்கும் போர்வைகளும் மெல்லிய பருத்தித் துணியால் அமைந்திருந்தன. சாளரங்களின் அருகிலே குளிர்ந்த நீர்க்குடங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கங்கே நீர்தெளிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலமாக விரும்பிய போதெல்லாம் மழை தூறுவதுபோலத் தண்ணீர் தெளிக்கச் செய்யலாம். இந்த மாளிகையின் கதவுகள் பகலில் மூடப்பட்டும் இரவில் திறக்கப்பட்டும் இருந்தன.

சுபமாளிகை

சுபமாளிகை என்னும் பெயரையுடைய மூன்றாவது மாளிகை பனிக்காலமாகிய கூதிர்காலத்தில் வசிப்பதற்காக அமைக்கப்பட்டது. இதில் ஏழு மாடிகள் இருந்தன. மாளிகைச் சுவர்களிலே சில விடங்களில் தீ எரிவதுபோலவும், சில இடங்களில் தாமரை அல்லி முதலிய நீர்ப்பூக்கள் மலர்ந்திருப்பது போலவும் ஓவியங்கள் கண்ணைக் கவரும்படி எழுதப்பட்டிருந்தன. இம்மாளிகையிலிருந்த ஆடைகளும் தலையணை முதலியவைகளும் கம்பளியும்பருத்தியும் கலந்து செய்யப்பட்டிருந்தன. கதவுகளில் சில பகலில் திறக்கப்பட்டு இரவில் மூடப்பட்டும், சில கதவுகள் பகலில் மூடப்பட்டு இரவில் திறக்கப்பட்டும் இருந்தன.

இவ்வாறு கார்காலம் வேனிற்காலம் கூதிர்காலம் என்னும் மூன்று காலங்களையும் இன்பமாக கழிப்பதற்கு ஏற்றவாறு மூன்று மாளிகைகளை அரசர் அமைத்துக் கொடுத்தார்.