பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 19

பணிவிடையாளர் பலரை ஏற்படுத்தினார். இனிய அறுசுவை உணவுகளை அமைத்துக் கொடுக்கவும் தூய மெல்லிய ஆடைகளை அவ்வப்போது அளிக்கவும் நறுமணச் சாந்துகளையும் மலர் மாலைகளையும் தொடுத்துக் கொடுக்கவும் ஏவலாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இசைப்பாட்டு பாடும் அழகிய மகளிரும், குழல் யாழ் முழவு முதலிய இசைக்கருவிகளை வாசிக்கும் மகளிரும், நடனம் நாட்டியம் ஆடும் மங்கையரும் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு சுத்தோதன அரசர் தமது குமாரன் இல்லற வாழ்க்கையிலேயே நிலை கொள்ளும்படியான பலவற்றையும் செய்து கொடுத்தார். மேலும் கண்ணுங் கருத்துமாக குமாரனைக் கவனித்து வந்தார். அசித முனிவரும் கொண்டஞ்ஞ நிமித்திகரும், சித்தார்த்த குமாரன் துறவு பூண்டு புத்தராவார் என்று கூறிய மொழிகள் சுத்தோதன அரசரின் மனதில் பதித்திருந்தன. ஆகவே, தமது குமாரன் துறவு பூணாமல் இல்லறத்திலேயே இருக்கச் செய்யத் தம்மாலான முயற்சிகளையெல்லாம் செய்தார்.

சித்தார்த்தர் திருமணம்

சித்தார்த்த குமாரனுக்கு திருமணவயது வந்ததை பற்றி சுத்தோதன அரசர், அவருக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணினார். அமைச்சர்களை அழைத்து தமது கருத்தைக் கூறினார். அக்கருத்தை யறிந்த சாக்கிய குலத்தவர் எல்லோரும் தமது குமாரத்தியை மணஞ்செய்து கொடுப்பதாக கூறினார்கள்.

சுத்தோதன அரசர் தமக்குள் இவ்வாறு எண்ணினார்: "குமாரனுடன் கலந்து யோசிக்காமல் நானாகவே மணமகளை ஏற்படுத்தினால் ஒருவேளை குமாரனுக்குப் பிடிக்காமல் இருக்கக்கூடும். குமாரனே யாரையேனும் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொன்னால், ஒருவேளை மணம் வேண்டாம் என்று மறுத்துக் கூறவும் கூடும். என் செய்வது! நாட்டிலுள்ள மங்கையர் எல்லோரையும் அரண்மனைக்கு வரச்செய்து, அவர்களில் யாரிடம் குமாரனுக்கு ஆசை பிறக்கிறது என்பதை உபாயகமாக அறிந்துகொள்ள வேண்டும்" என்று தமக்குள் சிந்தித்தார்.

பிறகு வெள்ளியினாலும் பொன்னாலும் பலவிதமாக நகைகளையும் அணிகலன்களையும் ஏராளமாகச்செய்வித்து "இன்று ஏழாம் நாள் சித்தார்த்தகுமாரன் மங்கையருக்குப் பரிசளிக்கப் போகிறார். பரிசுகளை பெற்றுக்கொள்ள மங்கையர் எல்லோரும் அரண்மனைக்கு வரவேண்டும்" என்று பறையறிவித்தார்.