பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 59

அப்போது மாரன், இவருக்கு அச்சமுண்டாக்கி இவரை எழுந்து ஓடச்செய்வேன் என்று தனக்குள் நினைத்து, ஒன்பதுவிதமாக மழைகளைப் பொழியச் செய்தான். இவைகளினாலே போதிசத்துவருக்கு எவ்விதமான துன்பமும்உண்டாகவில்லை. அவர் அஞ்சாமல் சிங்கம் போல் வீற்றிருந்தார். மாரன் தான் அமர்ந்திருந்த கிரிமேகலை என்னும் யானையைப் போதிசத்துவர் மேல் ஏவினான். 'ஓய்! அந்தப் பதுமாசனத்தில் இருந்து எழுந்து ஓடிப்போ!" என்று அதட்டிக் கூவினான். அப்போதும் போதிசத்துவர், குழந்தை தன்னைக் காலால் உதைத்தாலும் கோபப்படாத தாயைப்போல இருந்து. மாரனைப் பார்த்து, "மாரனே! இவ்விடத்தை விட்டு நான் போகமாட்டேன்" என்று உறுதியாகக் கூறினார்.

அப்போது மாரனுடைய சேனைகள் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டன. போதிசத்துவர், கிரிமேகலை மீது அமர்ந்திருந்த மாரனைப் பார்த்து மேலும் கூறுவார்:- "இந்தத் தர்ம யுத்தத்திற்கு நான் முனைந்து இருக்கிறேன். இந்தப் பதுமாசனத்தில் இருந்து மாரன் என்னை அசைக்க முடியாது. உலகத்திலே ஒருவரும் வெல்ல முடியாத காமம், வெகுளி, மயக்கம் முதலான சேனைகள் உன்னிடம் இருக்கின்றன. ஆனாலும், நான் தனியாக இருந்து பிரஞ்ஞா(ஞானம், அறிவு) மூலமாகப் போர் புரிந்து உனது சேனைகளைத் தோல்வியுறச் செய்வேன். ஒ, மாரனே! நான் உயர்ந்த நன்ஞானத்தினாலே மித்தியா சங்கல்பத்தை (பொய் அறிவை) நிக்கி சம்யத் சங்கல்பம் கொண்டு நான்கு விதங்களினால் மனத்தைப் பண்படுத்தி அதை விழிப்புடன் நன்றாக வைத்திருக்கிறேன். என்னுடைய சீடர்களையும் விழிப்பாக இருக்கும்படி பயிற்சி செய்விப்பேன். நான் கூறுகிறபடி நடக்கிறவர்கள் நிர்வாண மோக்ஷத்தைப் பெறுவார்கள். உன்னால் தோல்வியுற மாட்டார்கள். அவர்கள் துக்கம் அற்ற நிர்வாண மோக்ஷத்தை யடைவார்கள்."

இதைக் கேட்ட மாரன், "ஓ, சிரமணரே! என்னிடம் உனக்கு அச்சம் இல்லையா?" என்று கேட்டான்.

"இல்லை, மாரனே! உன்னிடம் எனக்கு அச்சம் இல்லை" என்று உறுதியாகக் கூறினார் போதிசத்துவர்.

"தேவர்களும் என்னை எதிர்க்கத் தைரியம் இல்லாதபோது, மனிதனாகிய நீ மட்டும் எக்காரணத்தினால் அச்சமில்லாமல் இருக்கிறாய்?" என்று கேட்டான் மாரன்.