பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 65

கிடைக்கப் பெற்றதையும் அறநெறியை ஐயமறக் காணப் பெற்றதையும் அறநெறியை மக்களுக்குப் போதித்து அவர்களைத் துன்பங்களிலிருந்து நீக்கும் ஆற்றல் பெற்றிருப்பதையும் சிந்தித்துப் பார்த்து அதனாலே மகிழ்ச்சியடைந்து இவ்வாறு உதானம்[1] கூறினார்:

"பிறப்பு இறப்பாகிய சம்சாரம் எப்போதும் துன்பமானது. உடம்பாகிய வீட்டைக் கட்டும் திருஷ்ணை என்று சொல்லப்பட்ட கொல்லனைக் காண்பதற்காக; போதிஞானம் என்னும் கண்ணைப் பெறும் பொருட்டு. இதுவரையில் நூறாயிரக்கணக்கான பிறப்புக்களைப் பிறந்தேன். கடைசியாக, ஓ! கொல்லனே, உன்னைக் கண்டுபிடித்தேன். நீ இனிமேல் எனக்கு உடம்பாகிய வீட்டைக் கட்டமாட்டாய். (பிறப்பு இறப்பு இல்லை) உன்னுடைய கிலேசம் என்னும் வலிச்சல்கள் உடைக்கப்பட்டன. பேதைமை என்னும் கைத்துண்டுகள் பிளக்கப்பட்டன. என்னுடைய மனம் நிர்வாண மோக்ஷம் அடைந்தது. ஆகையால் ஆசையற்ற அர்ஹந்த பலனை யடைந்தேன்."

இவ்வாறு உதானம் உரைத்த பின்னர் ததாகதர், "இந்தப் பர்யங்கத்திற்காக (பர்யங்கம் - ஆசனம். புத்த பதவி என்றபடி) நான்கு அசங்க கல்பகாலம் பிறவி எடுத்து வந்தேன். நான் அடையப்பெற்ற இந்த ஆசனம் (நிலை) வெற்றியாசனம்; மங்கல ஆசனம். நான்குவிதமான வீரியங்களை மனத்திலே நிறுவி இங்கு அமர்ந்து புத்த பதவியடைப் பெற்றேன்" என்று நினைத்தவண்ணம் ஒரு வாரம் வரையில் அங்கேயே தங்கி விமுக்தி சுகத்தைத் துய்த்துக் கொண்டிருந்தார்.

அதன்பிறகு, அந்த வாரத்தின் கடைசி நாளாகிய ஏழாவது நாள் இரவில் முதல் யாமத்திலே, பன்னிரண்டு நிதானங்களை முதலிலிருந்து கடைசி வரையில் இவ்வாறு தமக்குள் நினைத்தார்.

பேதைமை சர்வாச் செய்கை யாகும்
செய்கை சார்வா வுணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா வருவுரு வாகும்
அருவுரு சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா வூறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றாகும்மே


  1. உதானம் - பிரீதிவாக்கியம்