பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 / புத்தரின் வரலாறு

பற்றின் றோன்றுங் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரண மாக
வருமே யேனை வழிமுறைத் தோற்றம்
தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலைகை யாறெனத்
தவலில் துன்பத் தலைவரும் என்ப
ஊழின்மண் டிலமாச் சூழுமிந் நுகர்ச்சி[1]

இவ்வாறு ஊழின் மண்டிலமாகப் பன்னிரண்டு நிதானங்களைத் தமது மனத்திலே சிந்தித்துப் பார்த்த பகவன் புத்தர் அந்த இரவின் முதல் யாமத்தின் இறுதியிலே இவ்வாறு உரைத்தார்:-

பிறப்பு இறப்பாகிய துன்பத்தை நீக்கக் கருதி ஊக்கத்தோடு முயற்சி செய்கிற யோகி ஒருவர், பௌத்தத்தின் முப்பத்தேழு தத்துவத்தை எப்போது அறிகிறாரோ அப்பொழுதே - பேதைமை முதலான காரணங்களினாலே உண்டான துக்கங்களைப் பிரித்துப் பிரித்து ஆராய்ந்து பார்க்கிறபடியினாலே - அவருடைய ஐயங்கள் மறைந்து விடுகின்றன என்று உதானம் (பிரீதிவாக்கியம்) உரைத்தார்.

பின்னர் அந்த இரவின் நடுயாமத்தில் ததாகதர் ஊழின் வட்டமாகிய பன்னிரு நிதானத்தைக் கடைசியில் இருந்து முதல் வரையில் இவ்வாறு சிந்தித்தார்.

"பேதமை மீளச் செய்கை மீளும்
செய்கை மீள வுணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருவுரு மீளும்
அருவுரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீள பற்று மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி
மீளும் கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும் தோற்றம் மீளப்
பிறப்பு மீளும் பிறப்புப் பிணி மூப்புச்


  1. மணிமேகலை 30: 104-118. இது. விநயபிடகத்தின் மகாவக்கம் என்னும் பிரிவில் முதல் காண்டத்தில் உள்ள பாலி மொழி வாக்கியத்தின் சொல்லுக்குச் சொல் நேர் மொழி பெயர்ப்பாக இருக்கிறது