பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றைக்குமே மேன்மையுற்று விளங்கும்' என்று தமது முகவுரையில் குறித்துள்ளார். மனிதனின் உள்ளச்சோர்வை அகற்றி, ஊக்கமளித்து, அவன் பேராற்றலும், அன்பும், அறிவும் பெற்று நிறைவுடையவனாகச் செய்வதே கீதையின் நோக்கம். இந்தியத் தத்துவ ஆராய்ச்சியில் பகவத்கீதை ஒரு முற்றுப்புள்ளி யெனலாம். முந்திய தத்துவ நூல்களுக்குப் பின்னால் உரைகள் பல எழுதப் பெற்று வந்தனவேயன்றி, ஆராய்ச்சி கீதையுடன் நின்று விட்டது. வேதகாலத்திலும், அதற்கு முன்பும் மண்ணும், மரமும், கதிரும், ஒளியும், காற்றும், தீயும் கடவுளாக இருந்த நிலை, மாறி ஏகமான பரம் பொருள் ஒன்றுதான், மற்றவையெல்லாம் அதன் தோற்ற மென்றும், அந்த மெய்ப்பொருள் மாறு பாடின்றி என்றும் உளதான 'சத் ஆகவும் ஒளிமயமான 'சித் ஆகவும், இன்பமயமான 'ஆனந்தம்' ஆகவும் உளது என்றும் கூறும் தத்துவம் நிலைத்து விட்டது. பகவத் கீதை பண்டிதர்களுக்கு மட்டுமின்றி மற்ற ஜனங்களுக்கும் உபநிடதமாகி விட்டது. புராணங்கள் ஆயினும், சமயக் கொள்கைகளைக் கல்வியறிவில்லாத பெரும்பாலான மக்களிடையே பரப்புவதற்குப் புராணங்களென்ற கற்பனைக் கதைகளும் கட்டப் பெற்றன. இவை முதலில் பதினெட்டாக இருந்து, பின்னால் எண்ணிலடங்காதவையாகப் பெருகி விட்டன. ஆதிப்புராணங்களில் ஏழு நரகங்களே குறிக்கப்பட்டுள்ளன. பின்பு பாகவத புராணத்தில் ஆயிரக் கணக்கிலும், கருட புராணத்தில் 84 லட்சம் நரகங்களும் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. மூன்று ஆசாரியர்கள் காலம் செல்லச் செல்ல பிறசமயங்களின் போட்டியினாலும், வைதிக சமயத்தைப் பற்றி வாழ்க்கையில் சிரத்தை குறைந்ததனாலும், அவ்வப்போது பல ஆசாரியார்களும், கவிவாணரும், கல்விமான்களும், தோன்றி மக்களை ஊக்கப்படுத்தி வந்திருக்கின்றனர். இவர்களுள் கி.பி.9-ம் நூற்றாண்டில் சங்கரரும், 11-ஆம் நூற்றாண்டில் இராமாநுஜரும் 12-ம் நூற்றாண்டில் மாத்வரும் தலைசிறந்த ஆசாரியர்களாகப் போற்றப்படுகின்றனர். இவர்கள் மூவரும் வேதாந்த நூல்களுக்கு விரிவுரை எழுதியுள்ளனர். இவ்வுரைகளை ஆதாரமாய்க் கொண்டு அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என்று வைதிக சமயம் மூன்று பிரிவாகப் பிரிந்தது; மூன்று பிரிவான தத்துவ நூல்களும் பெருகி விட்டன. ப. ராம ஸ்வாமி ை 47