பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடுகளை ஆண்டு வந்த அரசர்களும், அவர்களைச் சேர்ந்த கூடித்திரியர்களும், செல்வமும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் வாணிபம் செய்து பெரும் பொருளிட்டிய வர்த்தகர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையிலிருந்தனர். கங்கை நதி பாயும் வளமான பிரதேசங்களிலே ஆரியர்கள் அப்போது நிலையாக வாழ்ந்து வந்தனர். நாட்டின் பூர்வ மக்களோடு அவர்களுக்கு ஏற்பட்டிருந்த பூசல்கள் தீர்ந்து, இரு சமூகங்களும் இனங்கியிருந்ததால் அமைதி ஏற்பட்டிருந்தது. உணவுக்குப் பஞ்சமில்லாமல் எங்கனும் விளைநிலங்கள் தானியங்களை வாரி வழங்கின. பசுமையான வனங்களிலும் சோலைகளிலும் சுவையுள்ள தீங்கனிகள் நிறைந்திருந்தன. ஏராளமான பசுக்கள், காளைகள், ஆடுகளும் இருந்தன. செல்வம் மிகுந்த பெரிய நகரங்கள் பலவும், ஆயிரக்கணக்கான கிராமங்களும் அமைந்திருந்தன. உணவுக்க வலை யொழிந்திருந்ததால், மக்கள் தத்துவம் பேசவும், தத்துவப் போர்கள் புரியவும் காலமும் வசதியாயிருந்தது. வேத, உபநிடதங்கள் அறிவாளரிடையே மட்டும் செல்வாக்குப் பெற்றிருந்தன. பெரும்பாலான பொது மக்கள், தொன்று தொட்டுத் தாங்கள் கடைப்பிடித்து வந்த முறைகளில், கடவுள் வழிபாடுகளைச் செய்து வந்தனர். சாத்திரங்கள் யாவும் சமஸ்கிருதத்திலேயே இருந்தன. ஜனங்கள் பழைய பிராகிருத மொழியிலே பேசிவந்தனர். கல்வியும் சமய அறிவும் சமுதாயமெங்கும் ஒரே படியாய்ப் பரவியிருக்கவில்லை. அந்நிலையில் வைதிக சமயத்தை எதிர்த்துச் சில அறிவாளர்கள் தோன்றிப் பிரச்சாரம் செய்ய முற்பட்டனர். சிலர் நாத்திகம் பேசினர், சிலர் பரம்பொருளைப் பற்றிச் சந்தேக வாதம் பேசினார். சிலர் தங்கள் மனம் போனவாறு கற்பனைகள் செய்து, மக்களுக்கு உபதேசம் செய்து, சீடர்களையும் சேர்த்து வந்தனர். இவர்களுள் கோசாலி மக்கலி" புராண காசியபர், காத்தியாயனர், சஞ்சயர், அஜித கேச கம்பலர் முதலியோர் முக்கியமானவர். இவ்வாறு ஒரு புறம் மோட்சத்திற்கு வழிகாட்டுபவர்களும், நகரத்திலிருந்து மீட்பவர்களுமாகக் கூடி வேலை செய்துவந்தனர். மற்றொரு புறத்தே இவ்வுலகிலே மக்கள் என்ன செய்ய வேண்டுமென்று போதிக்கப்பட்டது. வைதிக சமயத்தின் பாதுகாப்பாளராக இருந்து வந்த பிராமணர்கள், சாத்திர அறிவைத் தங்கள் ஏகபோக உரிமையாய்க் கொண்டிருந்தாலும், உலக வாழ்வுக்கு அவசியமான செல்வங்களைப் பெற்றிருந்ததாலும், சமய சம்பந்தமாக அதுவரை கவலையற்றிருந்தனர். ஆனால் திடீரென்று பூகம்பம் ஏற்படுவது போன்ற அதிர்ச்சியுடன் வட இந்தியாவில் பல இடங்களிலும் பல தத்துவங்கள் முளைத்து, தத்துவப் போர்களும் நடக்க ஆரம்பித்ததில், சமுதாயத்தின் அடிப்படையாக விளங்கிய சாதிக் கோட்டைகளும் குலுங்க ஆரம்பித்தன. k தமிழில் இவர் மற்கலி' என்று கூறப்படுவர். "I fi - புத்த ஞாயிறு