நூன்முகம் பெரியது; உலகம் பெரியது; நாம் வாழும் உலகம் பெரியது. இதன் வயது என்ன? சில நூறு ஆண்டுகளா? இல்லை; அதற்கு மேலும், சில ஆயிரம் ஆண்டுகளா? அதுவும் குறைந்த மதிப்பீடு. நில உலகின் வயதை ஆயிரக்கணக்கில் அல்ல; பல இலட்சக்கணக்கில் மதிப்பிடுகிறார்கள். எத்தனை இலட்சம் என்பதில் அறிஞர்களுக் கிடையே உடன்பாடு இல்லை. உலகம் தொன்மையானது என்பது நமக்குப் போதும். தொன்மையான உலகில் உயிர் வாழும் வகைகள் சிலவா? இல்லை. பலவா? இல்லை. எத்தனையோ! புல்லாய், பூடாய், புழுவாய் தலை நீட்டிய உயிர்வகைகள், பரிணமித்து, பரிணமித்து, மக்கள் நிலைக்கு வந்துள்ளதைக் காண்கிறோம். புல் பூண்டுகள் ஓரறிவோடு கிடக்க, மாக்கள் ஐந்தறிவோடு இருக்க, மனித இனம் மட்டுமே, ஆறறிவு நிலைக்கு வளர்ந் துள்ளது. விலங்குகளுக்கிடையில் விலங்காக வாழ்ந்த மனிதன், மனித இறைச்சியையும் உண்டு பிழைத்த காட்டுமிராண்டி, விலங்குகளை வேட்டையாடி பச்சையூணைத் தின்று கிடந்த விலங்கின் பங்காளி, இன்று எவ்வளவிற்கு வளர்ந்திருக்கிறான் என்பதை நொடிப்பொழுது நினைவுகூர்வோம். அருள் ஏதும் பெறாத சாதாரண மனிதர்கள் இருவர்- சோவியத் விண்வெளி வீரர்கள் இருவர் எதைச் சாதித்துக் காட்டி னார்கள்? விண்வெளியில், தொடர்ந்து நூற்று நாற்பது நாட்கள், விண்கலத்தில் சுற்றி வந்து ஆய்வுகளைப் பதிந்துகொண்ட பிறகு, பத்திரமாக, சோவியத் மண்ணில் வந்து இறங்கினார்கள். மானுட அறிவும் நுண்திறனும் ஆண்மையும் ஆற்றலும் சோர்வுபடாமையும் எத்தகைய 'அற்புத'ச் சாதனையைக் கொடுத்துள்ளது பார்த்தீர் களா? 'மானுடம் புல் அல்ல' என்று பாவேந்தர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினது மிகையல்ல. மிருக நிலையிலிருந்து வானோர் நிலைக்கு வளர, மக்கள் இனம் எடுத்துக்கொண்ட காலம் குறுகியது அல்ல; நீண்டது; மிக மிக நீண்டது. பல இலட்சம் ஆண்டுகள் என்று அறிஞர்கள் வாதிடுகின் றார்கள்..
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/6
Appearance