உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செல்வம்

ஒன்றுகள் பத்தாய், நூறா,-
யொருலட்ச மெனவு யர்ந்தால்
தொன்றுகள் தொலைந்து தோற்றம்.
துணி,மனை- புதுமை யொன்றி,
நன்றுகள் நலிய, நாட்டின்
நாயகர் தாமாய், நாளும்
மன்றுகள், கோவில் மாலை,-
மகத்துவ மனிதர்,- மற்றே !

கண்பனி யுகுக்கத் தம்முன்
கையேந்தி நிற்போ ருள்ளம்
புண்படப் புன்சொல் சிந்திப்
புறம்போக்கிப் புனித ரான
நண்பரை யொதுக்கி, யொன்றா
நல்லோரை நலித்து, நாட்டில்
பண்பினைப் பயமுறுத்திப்
பணிவித்தல் பணக்கோட் பாடே!

தேசினில் திளைத்து வாழும்
தேற்றம்தேய் பிறையாய்த் தீர,
மாசெனக் கழித்த தெல்லாம்
மனத்தினிற் கொழிக்க வைத்'தெம்
மீசனே காப்பீ ரெம்மை',
யெனவேத்தி யிரைஞ்சு வார்போய்க்
காசெனுங் கயிற்றி னால்தம்
கழுத்தினை யிறுக்கிக் கொண்டே!

‘ஈசனே' யென்னுஞ் சொல்லுக்
கேற்பதோர் பொருள்கா ணார்க்கைக்
காசினுக் காகக் கல்லில்
கடவுளைப் படைத்தோர், மக்கள்
நேசமா யிருந்து வாழ்ந்த
நெறிகட்கு நேர்மா றாக்கி
நாசமே செய்தார், நாடு
நலன்,பொல னறியா வாறே!