பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

123


அங்கே அதியன் போர்க் கருவிகளை இப்படிக் கொட்டிலில் அடுக்கி வைக்கவில்லை; அவை போர்க் களத்தில் பகைவரைக் குத்தியதால் முனைகள் சிதைந்து பழுதுபட்டு உள்ளன. அவற்றைக் கொல்லன் கொட்டிலுக்கு அனுப்பிப் பழுது பார்த்துக் கொண்டிருக்கிறான்

அதியன் தன் இடத்தில் உள்ளவற்றைப் பிறர்க்குப் பகிர்ந்து அளிப்பான்; சோறு உண்ணத் தருவான்; செல்வம் மிக்கு உண்டாயின் பரிசிலர்க்கு வாரி வழங்குகிறான். இதுதான் அவன் செய்வது; அடுக்கி வைத்து அழகு பார்ப்பது இல்லை. பூ இட்டு வழிபடுவது இல்லை; மக்களை மதிக்கிறான்; போர்க் கருவிகளை அவன் நம்புவது இல்லை. -

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக் கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து, கடியுடை வியல் நகரவ்வே, அவ்வே, பகைவர்க் குத்திக் கோடு, நுதி சிதைந்து, கொல் துறைக் குற்றிலமாதோ- என்றும் உண்டாயின் பதம் கொடுத்து, இல்லாயின் உடன் உண்ணும், இல்லோர் ஒக்கல் தலைவன், அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே.

திணை - பாடாண் திணை, துறை - வாள் மங்கலம்

அவன் தூதுவிடத் தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலன் கொட்டில் காட்ட அவர் பாடியது.

96. அதியமான் பொகுட்டு எழினி (அதியன்மகன்)

பொகுட்டு எழினியே! உனக்கு இருவகைப் பகைகள் எழுந்துள்ளன.

ஒன்று மகளிர் உன்னைக் கண்டு காதல் கொள்கின்றனர். அவர்கள் உன்னை அடையப் பெறாமையால் மெலிந்து கண்கள் பசப்புப் பெறுகின்றனர். தோள்கள் மெலிவு அடைகின்றனர். அவர்களைக் கவர்ந்து வருத்துகிறாய். இது உனக்கு ஏற்பட்டுள்ள முதற்பகை.