பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


மண்ணின் மைந்தர்கள் பலரும் விண் உலகு அடைந்து விடுகின்றனர்.

நிலமகள் மட்டும் விலை நாலப் பெண்டிரைப் போல் தனித்து விடப் படுகிறாள். அவள் தனித்து அழும் காஞ்சியும் உண்டு என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

‘மயங்கு இருங் கருவிய விசும்பு முகன் ஆக, இயங்கிய இரு சுடர் கண் எனப் பெயரிய வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம், வயிரக் குறட்டின் வயங்கு மணி ஆரத்துப் பொன்அம் திகிரி முன் சமத்து உருட்டிப், பொருநர்க் காணாச் செரு மிகு முன்பின் முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும் விலை நலப் பெண்டிரின் பலர் மீக்கூற, உள்ளேன் வாழியர், யான் எனப் பல் மாண் நிலமகள் அழுத காஞ்சியும் உண்டு என உரைப்பரால், உணர்ந்திசினோரே.

திணை - காஞ்சி; துறை - பெருங் காஞ்சி.

மார்க்கண்டேயனார் பாடியது.

366. பெருங் காஞ்சி

உலக முழுவதும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆட்சி செய்தவரும் ஒரு நாள் மண்ணோடு மண்ணாய் மறைந்து ஒழிந்தனர்.

அறவழிவந்தவன் உன் தந்தை; மறம் மிக்க செல்வன் நீ! உனக்கு ஒன்று உணர்த்த விரும்புகிறேன். இதைக் கேட்டு நடந்து கொள்வாயாக!

உன் வலிமையைப் பிறர் அறியாதவாறு காத்துக் கொள்க; பிறர் கூறுவதைப் பொறுமையுடன் கேட்டு அறிந்து கொள்க.

பகற் பொழுதில் ஆள்வினைக்கு உதவுக, இரவுப் பொழுது நாளை நடப்பவற்றைப் பற்றிச் சிந்திக்க!

உழவுத் தொழிலை முடித்துவிட்டுப் பின் வைக்கோலைத் தின்னும் எருது போல உழைத்துக் களைத்துப் பின் மகிழ்வு கொள்க.