பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



39. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

நீ பிறர்க்கு ஈவது தனிச்சிறப்பு அன்று. அது உன் பிறவிக் குணம். புறாவுக்காகத் தன் உயிரையும் ஈந்தவன் உன் முன்னோன்.

போர் வெற்றி என்பதும் உன்னைப் பொறுத்தவரை புதுவது அன்று. தொடித்தோள் செம்பியன் தேவர்களுக்காக அசுரர்களின் அசையும் மதில்களை எறிந்து புகழ் கொண்டுள்ளான்.

நீதி வழங்குவதில் தனிப்பெருமை உனக்கு உள்ளது என்று கூறுவதற்கு இல்லை. உன் முன்னோன் கரிகால் வளவன் உறந்தை அவையத்தில் நீதி வழங்கிப் புகழ் பெற்றுள்ளான்.

உன் முன்னோர்கள் பெரும்புகழ் படைத்தவர் ஆவர்; அச்சால்பு உன்பால் அமைந்துள்ளது.

இமயத்தில் விற்பொறி பொறித்தவன் சேரமன்னன். அவன்தலை நகர் வஞ்சி; அதன்மீது படை எடுத்து அச்சேரனை வெற்றி கொண்டாய். பெருமைமிக்க இப்போர் வெற்றியை யாம் எவ்வாறு பாடுவது?

புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! ஈதல் நின் புகழும் அன்றே சார்தல் ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின்புகழும் அன்றே கெடு இன்று, மறம் கெழுசோழர் உறந்தை அவையத்து, அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் முறைமை நின்புகழும் அன்றே, மறம் மிக்கு எழு சமம் கடந்த எழு உறழ் திணிதோள், கண் ஆர் கண்ணிக், கலிமான், வளவ! யாங்கனம் மொழிகோ யானே - ஓங்கிய வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய ஏம விற்பொறி, மாண் வினை நெடுந்தேர், வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டும் நின் பீடுகெழு நோன் தாள் பாடுங்காலே?

திணையும் துறையும் அவை.

அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.