பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


கடற்கரைக் கழியில் உப்பை முகந்து கொண்டு கற்கள் பொருந்திய மலைநாட்டை நோக்கிச் செல்லும் உமணர்கள் தம் வண்டியின் சக்கரம் கற்களிடை ஆழ்ந்துவிட அதில் பூட்டியுள்ள வலிமைமிக்க எருது அதன் ஆழ்ச்சியைப் போக்குகிறது. அவ் எருதினைப் போல் இடுக்கண்களைக் களைந்து ஆட்சி செய்பவன் சோழன். வெற்றி முரசு முழங்குகிற அவன் நாட்டில் நிழல் தரும் அவன் வெண்கொற்றக் குடையை இந்நிறைமதி நிகர்த்துள்ளது. இவ் ஒப்புமை காரணமாக அதனைத் தொழுதனம்.

முந்நீர் நாப்பண் திமில் சுடர் போலச் செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் உச்சி நின்ற உவவு மதி கண்டு, கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து, தொழுதனம் அல்லமோ, பலவே - கானல் கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன், வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன், வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின் மாலை வெண் குடை ஒக்குமால் எனவே?

திணை - அது துறை - குடை மங்கலம்,

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

61. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னி

வயலில் நெய்தலையும், ஆம்பலையும் உழத்தியர் களைகளாகக் களைவர். அவ்வயல்களில் உள்ள வாளையைப் பிடித்துத் துண்டாக்கிச் சோற்றுக்குக் கறியாகக் கொண்டு அவ்வூர் உழவர் விலாப்புடைக்கத் தின்பர்; அதனால் செயல் தடுமாறுவர். அவர் தம் சிறுவர்கள் தேங்காயைப் பறித்துத் தின்பர். அவை திகட்டிவிட்டால் தம் தந்தையர் எழுப்பிக் குவித்துவைத்த வைக்கோல் போரில் ஏறிப் பனம் பழத்தைப் பறிப்பர். இத்தகைய புதுவருவாய் உடையது சோழ நன்னாடு.