பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

191


பாடியவர்: புறத்திணை நன்னாகனார். பாடப்பட்டோன்: ஒய்மான் நல்லியக் கோடன். திணை: பாடாண். துறை:

இயன்மொழி.

(தலைவனது கொடையாகிய இயல்பினை விதந்து பாராட்டுகின்றார் புலவர். அவன் கழிமென் சாயல் காண் டொறும், அவனைக் காணா வழி நாட்களை நினைந்து என் நெஞ்சம் இரங்கும் என்று கூறுவதன் பொருட் செறிவை அறிந்து இன்புறுக) -

ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர் கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின், யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத் தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறுஉம், இழுமென ஒலிக்கும் புனலம் புதவின், 5

பெருமா விலங்கைத் தலைவன், சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை உடையை வாழி, யெற்புணர்ந்த பாலே! பாரி பறம்பிற் பணிச்சுனைத் தெண்ணி ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக், 10

காணாது கழிந்த வைகல், காணா வழிநாட்கு இரங்கும், என் நெஞ்சு அவன் கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே.

விளையாடிக் கொண்டிருக்கும் மலையவர் மகளிர், பன்றியுழுத கரிய சேற்றைக் கிளறிப், புலால் நாற்றம் நாறும் ஆமையினது முட்டையைத் தேன் மணம் வீசும் ஆம்பற் கிழங்குடனே எடுப்பர். அத்தகைய நீர்வளமுடைய மாவிலங்கை என்ற ஊருக்குத் தலைவன்; வறியோர் பலர் பாடிய புகழ் மாலைகளை அணிந்தவன்; நல்லியக் கோடன். அவனைத் துணையாகக் கொண்டதனால், என் விதியே, நினக்கோர் குறைவுமில்லை. அவன் வாழ்க! பாரியின் பறம்பிலே குளிர்நீர்ச் சுனைகள் எங்கும் இருத்தலால், நீர் வேண்டிய பொழுது உண்ணலாமென யாவரும் கவலையற்றிருப்பர்.அவனைக் காணாத நாட்கள் வீண்நாட்கள். “இன்றே போல என்றும் அது தொடர வேண்டும் என, அவன் சாயலைக் காணுந்தோறும் வருநாளை நினைந்து இரங்கும் என் நெஞ்சம். ஆனால், நல்லியக் கோடன் என்றும் துணையாயுள்ளான். இனி, நீ அஞ்சுவதற்கு யாதுமே இல்லை! -