பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

புறநானூறு - மூலமும் உரையும்


வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போக எண்ணியவனோ, அஃது எளிதே எனினும், ஏதும் கிடைக்கப் பெறாது வறிதே திரும்புதலும் கூடும். அதனால், உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோராகவே விளங்குக! சுவர்க்க போகம் உண்டென்றால்,

அவர்க்கு அதுவே உறுதியாகக் கிடைக்கும். அது இல்லை யென்றால், மாறிமாறிப்பிறக்கும் பிறப்பாவது இல்லாமற் போகும். பல பிறவிகளும் இல்லையென்று சொல்வாராயின், இவ்வுலகிலே இமயம் போன்ற உயர்ந்த புகழாவது என்றும் நிலைநிற்கும். எனவே, எவ்வகையானும் நல்வினைகள் செய்தலே நன்று. (இறுதியாகப் புகழைச் சொன்னது, அதுவே கண்கூடாகக் காணுவதான உறுதி பற்றியாகும்)

சொற்பொருள்: கசடு ஈண்டு - அழுக்குச் செறிந்த 3. துணிவு இல்லோர் - தெளிவில்லாதோர். 5. குறும்பூழ் - காடை 11. பிறவா ராயினும் என்னும் உம்மை, அசைநிலை; உம்மையின்றி ஒதுவாரும் உளர்.

215. அல்லற்காலை நில்லான்

பாடியவர்: கோப்பெருஞ் சோழன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்; அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது.

('செல்வக் காலை நிற்பினும், அல்லற் காலை நில்லலன் மன்னே என்று பிசிராந்தையாரின் கெழுமிய நட்பை எடுத்துக் கூறுகின்றான் சோழன்)

கவைக்கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் தாதெரு மறுகின் போதொடு பொதுளிய வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளிஇ, ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை அவரை கொய்யுநர் ஆர மாந்தும் - 5

தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்

பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே, செல்வக் காலை நிற்பினும், அல்லற் காலை நில்லலன் மன்னே.

"வரகரிசிச் சோற்றையும், அதனுடன் வேளையினது பூவை வெண்மையான தயிரிற் பெய்து சமைத்த புளித்த கூழையும், அவரை கொய்பவர் நிறைய உண்ணுகின்ற தென்னகத்துப் பொதிய மலையிலே, அம்மலைக்கு உரியவனான பாண்டியனின் நாட்டிலே, என்னையே நினைத்துக் கொண்டிருப்பவனான பிசிரோன்