பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

புறநானூறு - மூலமும் உரையும்


230. நீ இழந்தனையே கூற்றம்

பாடியவர்:அரிசில்கிழார். பாடப்பட்டோன்: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. -

('வீழ்குடி உழவன் வித்துண்டாற் போலக் கூற்றுவன் அதியனின் உயிரைக் கொண்டனன் என்று கூறுகின்றார் புலவர்)

கன்றுஅமர் ஆயம் கானத்து அல்கவும், வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும், களம்மலி குப்பை காப்பில வைகவும், விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல், வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள், 5

பொய்யா எழினி பொருதுகளம் சேர - ஈன்றோர் நீத்த குழவி போலத்; தன்அமர் சுற்றம் தலைத்தலை இணையக், கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு நோய்உழந்து வைகிய உலகிலும், மிக நனி 10 நீஇழந் தனையே, அறனில் கூற்றம்! - வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான், வீழ்குடி உழவன் வித்துஉண்டாஅங்கு ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின்,

நேரார் பல்லுயிர் பருகி, 15

ஆர்குவை மன்னோ, அவன் அமர்அடு களத்தே.

காட்டிலே மேயும் ஆணினத்திற்குப்பிற விலங்கினங்கள் துயர் செய்யாதது; வெம்மைமிக்க சுரத்தின் இடைவழிகளிலும் தங்கிச் செல்ல வசதி உடையது; களத்திலே நெற்பொலி காவலின்றிக் கிடக்கும் தன்மையது; இத்தகு ஆட்சிநலம் உடையவன்; எதிர்நின்று தடுக்கும் பகையையும் வெல்லும் ஆற்றலுடையவன்! இவ்வாறு நிலம் கலங்காத நல்லாட்சியும், உலகம் புகழ்ந்த பேராண்மையும், சொற்பிறழா வாய்மையும் உடைய எழினியும் போரிலே பொருது வீழ்ந்தான். தாயற்ற சிறுகுழவி தான் சேர்ந்த உறவினர் இடந்தோறும் பசியால் ஓயாது அழுது வருந்துவதுபோல, அவனை இழந்ததால் நாடெங்கணும் வருந்துகிறது. உலகத்தின் வருத்தத்திலும், அறமில்லாத கூற்றுவனே, நின் வருத்தந்தான் பெரிது. வித்தினை விதைத்து அதனால் வரும் வருவாயை நினையாது, அதனையே உண்ணும் உழவனைப்போலப், பகைவர் பலரையும் போர்க்களத்திலே கொன்று நினக்குத் தரும் அவனைக் கொன்ற நீயும், பெரிதும் அறியாமை உடையை ஆவாய்!