பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470

புறநானூறு - மூலமும் உரையும்


சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் - 43

இவன் நலங்கிள்ளியின் தம்பியாவான். இவனைப் பாடியவர் தாமப்பல் கண்ணனார். இச் செய்யுளில், இவனது பண்பு மேம்பாட்டை மிகவும் வியந்து போற்றிப் பாடுகின்றனர் புலவர் தாமப்பல் கண்ணனார். - சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி - 80 - 85

இவன் 'தித்தன்' என்னும் சோழனின் மகன். இவனைப் பாடியோர் சாத்தந்தையார், நக்கணையார் ஆகியோராவர். இவன் முக்காவனாட்டு ஆமூர் மல்லனோடு பொருது வெற்றி கொண்ட செய்தியைச் சாத்தந்தையார் கூறுகின்றனர். பெருங்கோழி நாய்கன் மகளான நக்கண்ணையார் இவன்பாற் காதல் கொண்டவர். அதற்கு இவன் ஆதரவு தரானாயினும், தாம் இவனை மறவாதே வாழ்ந்தவர். அவரது செய்யுட்கள் இவனை அவர் விரும்பிய விருப்பத்தின் செறிவைக் காட்டுவனவாகும்.

சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி - 13

பெருநற்கிள்ளி என்னும் பெயரையுடையவன் இவன்; பட்டத்து இளவரசனாதலின் முடிசூடுதலுக்கு உரியவனான தலைக்கோ என்னும் சிறப்புப் பற்றி, முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி' எனப் பெயர் பெற்றனன். இவன் காலத்து வஞ்சி வேந்தனாக விளங்கியவன் அந்துவஞ் சேரல் ஆவான். அந்துவன் தமிழன்பன், முடமோசியாரின் உயிர் நண்பன். இக் கிள்ளி அந்துவனோடு பகை கொண்டான். வஞ்சியை முற்றுகையிட்டான். ஒரு சமயம், இவனுர்ந்த களிறு மதங் கொண்டது; கட்டுக் கடங்காது சென்று வஞ்சியுட் புகுந்தது. தனித்து வந்த அவனைக் கண்டு சினங்கொண்ட அந்துவனுக்கு அவன் யாவனென உரைத்து, அவனைக் காத்துப் போக விடுமாறு சொல்லுகின்றார். அந்துவனும் அவ்வாறே செய்தருள, அவன் பெருந்தகைமை கண்ட இக் கிள்ளியும், தன் செயலுக்கு நாணியவனாக, அவனோடு நட்புப் பூண்டு வாழ்ந்தனன். சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி - 62 - 3, 368

இவன் வேற் போரில் வல்லவன்; பெருநற்கிள்ளி என்னும் பெயரினன். இவனைப் பாடியோர் கழாத்தலையாரும் பரணரும் ஆவர். இவன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனோடு பொருது, களத்தில் இறந்தனன்; சேரலாதனும் களத்தில் இறந்தனன். இவ்வாறு இருவரும் பொருது மாய்ந்த செயலுக்குப் புலவர்கள் பெரிதும் வருந்தினர். போரின் அழிபாடுகளை நினைந்து கலங்கிப் பாடினர். -