பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 . புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் கண்கள் சிவக்க நோக்கவும், போரினைச் செய்கின்றவரான, தேன்பொருந்திய நறுநாற்றம் கமழுகின்ற மாலையினை யுடையரான பகைவர்கள் வேலினை எறிந்தனர். வீரமிக்க அவ்வேலின் முனையினைத் தன் மார்பின்பால் அவன் ஏற்றுக் கொண்டான். அப்படி ஏற்ற அவனது மார்பு இப்போது நம் மன்னனால் வழங்கப்பட்ட இனமொத்த முத்தாரங்களை அணிந்தது. - விழுப்புண்பட்ட வீரனுக்குச் சிறப்புச் செய்த மன்னனது செயலைக் கூறுதலால், இது மாராயவஞ்சி ஆயிற்று. நறவுதேன். மறவேல்-வீரவேல். இலை-வேலின் முனை. - 11. நெடுமொழி வஞ்சி ஒன்னாதார் படைகெழுமித் தன்னாண்மை எடுத்துரைத்தன்று. பகைவர்தம் படையணியினை நெருங்கி நின்று, ஒரு வஞ்சி மறவன், தன்னுடைய பேராண்மையினைத் தானே உயர்த்துச் சொல்வது, நெடுமொழி வஞ்சி ஆகும். இன்னர் எனவேண்டா என்னோ டெதிர்சீறி முன்னர் வருக முரணகலும் - மன்னர் பருந்தார் படையமருட் பல்லார் புகழ விருந்தாய் அடைகுறுவார் விண். - 47 மாறுபாடு மிகுதியாகின்ற தன்மையினரான மன்னர்கள் எவராயினும், இன்ன தன்மையார் என்று சொல்லி நிற்றல் வேண்டா. என்னொடும் போரிடுதற்கு எதிரிட்டுச் சீறி என் முன்னர் வருவாராக வந்தாராயின், பருந்தினம் நிறைந்திருக்கும் தானைப் போரிடத்தே, பலரும் போற்றுமாறு, விண்ணவர்க்கு விருந்தாக அவர்கள் சென்று சேர்வார்கள். படையணி முன்நின்று, மாற்றாருள் எதிர்ந்தார் யாவரேனும் அவரை விண்ணவர்க்கு விருந்தாக்குவதாக வஞ்சி மறவன் கூறுதலின், இது நெடுமொழி வஞ்சி ஆயிற்று. முரண் அகலும் மாறுபாடு விரிந்து பெருகும். படையமர்தானைப்போர்; 12. முதுமொழி வஞ்சி தொன்மரபின் வாட்குடியின் முன்னோனது நிலைகிளந்தன்று. தொன்மையான மரபினொடுங் கூடிய வாள்மறவர் குடியிலே வந்தோன் ஒருவனைச் சுட்டி, அவன் முன்னோன் ஒருவனது நிலையினைச் சொல்லிச் சிறப்பிப்பது, முதுமொழி வஞ்சி ஆகும்.