பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் கலை நிலை

கடவுள் வாழ்த்து

 
             புலமைநலம் சிறந்த புண்ணியர் சரிதமும்
             அலகில் கல்வி யவரறி வமைதியும்
             கவியின் சுவையும் கருத்தின் குவையும்
             சவியுயர் ஒழுக்கும் தகவும் தன்மையும்
             பலகலை நலனும் பழந்தமிழ் இயல்பும்
             தலைமையும் நிலைமையும் சார்பும் சால்பும்
             உலகம் நலமுற ஒளிசெய் துதவும்
             நிலவொளிர் வேணி நின்மலன் கண்மலர்
             வலமுயர் யானை முன்வர வந்த
             இலகொளி முருகன் என்னுளத் திருந்தே.

புலவர் நிலை

உலகம் இன்புற ஒழுகி உணர்வு நலங்களை உதவி யுள்ளமையால் புலவர்கள் இனிய உபகாரிகளாய் என்றும் தலைமை யெய்தி நிற்கின்றார். மலர்க்கு மணமும், மணிக்கு ஒளியும் போல் மனிதனுக்கு அறிவு பெருமை தருகின்றது. உணர்வின் அளவே மனிதன் உயர்ந்து வருகின்றான். உயிர்நிலையமான அவ்வுணர் வொளி குன்றிய பொழுது மனிதன் இருகால் விலங்கென இழிந்து திரிகின்றான். அவன் பிறப்பும் இருப்பும் பிழையாய் ஒருவழியுமின்றி உருவழிந்தொழிகின்றன. உள்ளொளியாகிய அறிவினையுடையான் தெள்ளியனாகித் தெய்வம் எனத் திகழ்கின்றான். இதனால் அறிவினது அருமையும் பெருமையும் இனிது புலனாம்.

அறிவே இறைவனுக்கு உருவம் ஆதலால் அப்பரமனது உறவுரிமையுடைய உயிரினங்களும் இயல்பாகவே அறிவுடையனவாய் அமைந்திருக்கின்றன. இயற்கையாக அமைந்துள்ள அவ் அறிவை வளம்படுத்தி வராமல் வறிதே இழந்திருப்பவர் பான்மைதிரிந்து ஆன்ம ஒளி குன்றி அவமே இழிந்து நிற்கின்றார். உளமலி கல்விo