பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10கம்பன் கலை நிலை

 

யால் அறிவை உரஞ்செய்துகொண்டவர் ஒளிமிகப்பெற்று வெளியே உயர்ந்து விளங்குகின்றார். நிலையறிவு கலையறிவோடு கலந்த பொழுது தலையறிவாய்த் தழைத்தெழுந்து தனியே ஒளிர்கின்றது. ஒளிநலம் கனிந்த அவ் வுயரறி வுடையவரே புலவர் என உலகில் உருவெய்தி வருகின்றார். ‘புலவர்’ என்பதற்கு அறிவுடையவர் என்பதே பொருள். புலம் = அறிவு. அதனையுடையவர் புலவர் என்க. கலைநலம் சுமந்த அறிவே இங்குப் புலம் என வந்தது.

இப் புலநலம் பலநலங்களையும் பயந்து நிலைமிகச் செய்கின்றது. இந்நிலவுலக முழுவதும் ஆளும் அரசனும் கலைநலமுடையானுக்கு நிகராகான். அவன் புறத்திருவினன். இவன் அகத்திருவினன்; அத்திரு விரைந்து அழியும்; இத்திரு என்றும் அழியாது நின்று நிலவும்; அது உடலைமினுக்கி உலகநிலையில் சிறிது உயர்வுதரும்; இது உயிரை உயர்த்தி இருமையினும் என்றும் பெருமையருளும்; அது தொட்டவுடல் தொலையத் தொலைந்தொழியும்; இது யாண்டும் தொலையாது தொடர்ந்து உயிர் புக்குழியெல்லாம் புகுந்து பொலிவு செய்து நிற்கும். ஒருமுறை தொட்ட உயிரை ஊழியும் விடாது மருவி உயர் நிலையில் உய்க்கும். கல்விபோல உயிர்க்கு உறுதுணை யாவது யாது? வேறு யாதுமே யில்லை என நீதி நூல்கள் யாவும் ஓதியுள்ளன.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள் 398)

என்றது பொய்யாமொழி. கல்வி உதவியின் எல்லையின்மை தெரிந்தே எழுமை என ஒர் அளவுகூறி இதில் உள்ள உளவினை வள்ளுவப் பெருந்தகை உய்த்துணர வைத்தார்.


ஏமாப்பு=உதவுதல். ‘ஏமம்’ என்னும் சொல் சேமம் காவல் இன்பம் முதலியவற்றைக் குறித்துவரும். ஆதலால் ஏமாப்பு என்பது உறுதியாய் நின்று உதவுதலை இங்கு உணர்த்தி நின்றது. உடைத்து= உடையது. கல்வி எழுமையும் இன்பம் தரும் என்னாது ‘ஏமாப்பு உடைத்து’ என்றது, உயிர்க்கு உண்மையான உறுதிநலம் நல்கிப் பரம்பரையாக உரஞ்செய்து நின்று என்றும் குன்றாத இன்ப நிலையில் இறுமாந்திருக்கச் செய்யும் என்பது தெரிய என்க. இதனால் அதனது ஆற்றலும் அருளமைதியும் அறியலாகும்.