பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் நிலை

11


 

இங்ஙனம் என்றும் அழியாத விழுமிய செல்வமாகிய கல்வியுடையாரை அன்றே அழியும் அவலமாகிய பொருளுடையாருடன் ஒரு துலையில் வைத்து ஒப்பு நோக்கலாகாது; ஒரு முறை ஒளவையார் இருவரையும் நடுவு நிலைமையுடன் நேரே சீர்தூக்கி நோக்கினார்; நோக்கவே ஏற்றத் தாழ்வு தெரிந்தது; தெரியவே,

"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்." (ஔவையார்)

எனத் தம் நோக்கில் கண்டதைக் காரணத்துடன் தூக்கி யுரைத்தார். இதனால் கல்வியினது எல்லையற்ற பெருமையும் அதனை யுடையவரது அருமையும் இனிதறியலாகும். கொற்றவனையும் கற்றவனையும் ஒரு நிலையில் நிறுத்தி ஒப்புநோக்கும் இதில் முன்னவனுக்கு யாதொரு அடையும் கொடாமல், பின்னவனுக்கு மட்டும் அடை மொழி கொடுத்துக் கூறியிருப்பது இங்கு ஆராயத்தக்கது. பிறப்புரிமையில் இயற்கை மாண்புடன் வந்துள்ள மன்னனிலும் ஒருவன் மாட்சியுறவேண்டுமாயின் அவன் இன்ன நிலையில் கற்று இன்ன வகையில் இருக்கவேண்டு மென்பதாம். செல்வத்தின் மாட்சி உலகப் பிரசித்தம் ஆதலால் அதனை எதிர்நிறுத்திக் கல்வியின் உண்மை யுயர்ச்சியை இங்ஙனம் உணர்த்தி யருளினாஅர். உலகம் ஆளும் அரசரினும் புலமையாளர் தலைமையாளர் என்றதனால் அவரது நிலைமையும் நீர்மையும் புலனாம்.

புவியர சொருவன் புகழ்மிகப் பெற்றுக்
குவியர சேத்தக் குலாவி நிற்பினும்
கவியர சனைய காட்சிகை வருமோ? -
எண்ணிய உடம்பில் இயலுறுப் பெழில்சேர்
ஒண்மணிப் பூண்புனைந் துயர்வுற் றிருப்பினும்
கண்மணி யனைய கண்ணியம் பெறுமோ?
உடலே யனையர் உலகாள் வேந்தர்;
உயிரே யனையர் புலமாள் வேந்தர்;


மாசு-குற்றம். அற என்றது மனம் மாசு அறவா? கல்வியில் மாசு அறவா? எது மாசற என எண்ண நின்றது. கருத்திலும் கலையிலும் மாசு இன்றிப் புனித பூரணனாய் அவன் இருக்கவேண்டும் என்பதாம்.