பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலர் படைப்பு நிலை

17


நூல் நெடிது விளங்குவதாம். ஆகவே சின்னாள் நின்று செத்தொழியும் செத்தைகளைப் படைக்கின்ற பிரமா எந்நாளும் நிலைத்து இன்பம் பயக்கும் சத்துக்களைப் படைக்கின்ற கவிஞர்களோடு ஒத்தெதிர் நில்லார் என்க.

கலைமகளை அவர் முகத்தில் வைத்துள்ளார்; இவர் அத்திருவை அகத்தில் வைத்திருக்கின்றார். அவர் நாவில் கொண்டு நாயகியாக நயந்து நிற்கின்றார்; இவர் பாவிலும் நாவிலும் புனைந்து அப்பூவியலாளைத் தேவதையாகப் போற்றி வருகின்றார். அவர் காதலுற்றுக் களிக்கின்றார். இவர் உள்ளமுருகி உயரன்புடன் பேணித் தொழுகின்றார். அதனால் அக்கலாதெய்வம் கணவன் என்ற முறையில் அவர்பால் அன்பு செய்து நிற்கின்றது. இவர்பால் அருள் புரிந்து வருகின்றது. உற்ற நாயகனிடம் உரிமைகொண்டாடினும் பெற்ற தாய் தன் பிள்ளைகளிடம் பேரன்பு செய்துவருதல்போல் கலைத்தாய் கலைஞர்களிடம் பெருங்கருணை காட்டி அவரைப் பேணிவருகின்றாள். ஆதலால் சிருட்டித் தொழில் அத்தாதையினும் மிஞ்சிய சீர்த்தியை அடைந்து கவிஞர் மேன்மை பெறலாயினர். சடவுலகத்தை அடலுடன் செய்துவருகின்ற அவனுடையதினும் அறிவுலகத்தை அழகுபெற ஆக்கிவருகின்ற இவரது ஆற்றல் போற்றற்குரியதாம். இவருடைய கலையொளி பரவ வில்லையானால் இவ்வுலகம் கடுவிலங்குகள் உலாவும் காடு போலக் கொடுமையாய் இருளடைந்துபோம். கலங்கி யுழலும் உயிர்களுக்குக் கலங்கரை விளக்காய் கலைஞர்கள் இலங்கி நிற்கின்றனர். "புலவன் கட்டியது உலகம்" என்னும் பழமொழி தொன்று தொட்டே எங்கும் வழங்கி வருகின்றது.

புலவர்கள் தம் கவிகள் மூலம் விதி விலக்குகளை விநயமாக நியமித்து நிற்கும் நிலைமையும், அந் நிலையில் அமர்ந்து உலகம் இயங்கிவரும் அமைதியும் ஊன்றி நோக்கின் வியப்பும் விம்மிதமும் எவர்க்கும் தோன்றும். அவர்களுடைய சொல்லால் உலகமெல்லாம் ஒருங்கே அசைந்து வருகின்றன. தீர்க்கதரிசிகளும் மதாசாரியர்களும் புலவர்களும் உலகிற்கு மார்க்கசகாயர்களாயிருக்கின்றனர். முன்னவர் மொழிகள் அருளுபதேசங்களாகின்றன. இன்னவர் உரைகள் அறிவொளிகளாய் வருகின்றன.

U