பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

கம்பன் கலை நிலை


விளங்கி உயர மொழிவிளக்கு ஏற்றியுள்ளமையால் கவிகள் பூவில் அயன் எனப் புவியில் உயர்ந்து நிற்கின்றார். அவன் உடல் உயிர் களைப் புறவுலகத்தில் படைக்கின்றான்; இவர் உரை யுணர்வுகளை அகவுலகத்தில் படைக்கின்றார். அவன் படைப்பில் ஆறுசுவைகளே உள்ளன; இவர் படைப்பில் ஒன்பது சுவைகள் உள்ளன. அதில் மடமையும் மயக்கமும் மருளும் நிறைந்துள்ளன; இதில் அறிவும் தெளிவும் அருளும் சுரந்துள்ளன. அது துன்ப நோக்கில் தொடர்ந்து செல்கின்றது; இது இன்ப நோக்கில் எழுந்து வருகின்றது. உறுதி உண்மைகளை மறந்து பெரிதும் அது மறுகி யுழல்கின்றது; இது சிறிதும் வழுவாமல் திருவருளே நாடி எழுகின்றது. இவ்வாறே பிரம சிருட்டிக்கும் கவி சிருட்டிக்கும் மாறுபாடான வேறு பாடுகள் இன்னும் பல உள்ளன; ஆதலால் அப்பூவில்லோனினும் இப்பாவல்லோர் மேன்மையாகப் பாராட்டப் பெறுகின்றார்.

பாவலர் படைப்பு நிலை


“கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு.” (நீதிநெறி விளக்கம்)

எனவரும் இதில் குமர குருபரர் பிரமாவோடு கவிஞர்களைச் சீர்தூக்கி நோக்கி அவ்வேதாவினும் இம் மேதாவிகள் மேலானவர் எனக் காரணங்காட்டிக் கருத்துரைத்திருத்தலறிக. இங்கே இவர் செய்யும் உடம்பு என்றது கவிகளையும் நூல்களையும். பிரமன் படைப்பு விரைந்து அழிந்து ஒழிகின்றது : கவிஞர் படைப்பு என்றும் அழியாது நின்று விளங்குகின்றது. திருவள்ளுவப் பெருந்தகையார் திருக்குறள் என்று ஒரு நூல் செய்து உலகில் விடுத்தார்; அது இன்றும் ஒளிசெய்து நின்று நிலவுகின்றது. இளமை எழில் குன்றாமல் வளமை சுருங்காமல் கிளரொளி வீசி உயிர்களெல்லாம் உள மகிழ்கூர முருகன்போல் என்றும் இன்ப நிலையமாய் அது நின்று திகழ்வதாம். அது வெளிவந்து ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இதற்குள் அயன் செய்தருளிய உருவங்கள் எத்தனையோ கோடிகள் இறந்து தொலைந்தன. இன்னும் அவ்வாறே எவ்வளவோ இறப்புக்களை எதிர்கண்டு யாண்டும் தளராமல் நீண்டு நிலைத்து அந்