பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி நிலை

19


என்பு தோல் இரத்தம் தசை முதலிய தாதுக்களாலாய உடம்பில் உயிர் அமைத்தல் போல் பெயர் வினை உரி முதலிய சொற்களாலாய கவியில் உறுதிப்பொருளைப் புலவர் அமைத்தருளுவர் என இது உணர்த்தி நிற்றல் அறிக. பிரம சிருட்டியோடு சேர்த்துக் கவி சிருட்டி இதில் எண்ணப்பட்டிருத்தல் ஈண்டு எண்ணத் தக்கது.

கவிநிலை

புனிதமான இனிய உயிர் அழகிய உருவில் மருவி யிருத்தல் போல் அறிவு நலம் கனிந்த விழுமிய பொருள் அரிய கவியில் அமைந்திருக்கும் என்க. அகத்தே அருள் அமைதி மானம் வீரம் கொடை முதலிய குண நலங்களும், புறத்தே இளமை யொளி தவழ்ந்து எழில் நலம் கனிந்த உருவப் பொலிவும் ஒருங்கே யமைந்த ஓர் பெருங் குலக்குரிசில் போல் உயர்ந்த கவிகள் சொல்லும் பொருளும் சுவை சுரந்து உள்ளும் புறனும் உணர்வொளி ததும்பிக் கண்ணும் கருத்தும் களிமீக்கூரக் காண்பவரெவர்க்கும் காட்சி யின்பம் பயந்து சிந்தைக்கு இனிய செவிக்கு இனிய என மாட்சி மிகுந்து அறிவுலகத்தை என்றும் ஆட்சி புரிந்துவரும்.

சுவை ததும்பிய இத்தகைய அரிய கவிகளுக்கு இனிய விளை நிலமாய் நமது மொழி தனியமைந்துள்ளது.

மொழி நிலை

இந்நிலவுலகில் தோன்றி விளங்குகின்ற மொழிகள் பல. ஒவ்வொரு தேசமும் தனித்தனியே தனக்கென உரிமையான தனி மொழியையுடையதாய் இனிதமர்ந்துள்ளது. எல்லா நாடுகளும் சொல்லால் இயங்கி வருகின்றன. தம் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தவும், பிறர் கருத்தைத் தாம் அறிந்துகொள்ளவும் மொழிகள் துணையாயுள்ளமையான் மனிதர் வாழ்க்கை அவற்றால் மாண்புற்று வருகின்றது. உயிருணர் குறிப்பை இயலுடன் இசைத்து அயலே செலுத்தும் ஒசைக் கூறுகளே பேசும் மொழிகளாய்ப் பெருகியுள்ளன. ஏறக்குறையத் தொள்ளாயிர மொழிகள் உலகம் எங்கணும் இதுபொழுது சொல்லாடப்படுகின்றன. விலங்கினங்களினின்றும் வேறுபட்டு எல்லையில்லாத பெருமையுடன் மனித