பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

கம்பன் கலை நிலை


வர்க்கம் தலைநிமிர்ந்து நிற்றற்குச் சொல்லாடல் ஒன்றே காரணமா யுள்ளது. --

மாநிலத்துக்கு மழைபோல மானிட வாழ்க்கைக்கு மொழி அமைந்திருக்கிறது. மழைபெயல் இலையெனில் உலகியல் நடவாது; அதுபோல் மொழியியல் இலையேல் மக்கள் வாழ்க்கை மறுகி ஒழி யும். மனிதர் ஒருவரோடு ஒருவர் அளவளாவி ஒருங்குகூடி வாழும் இயல்பினர் ஆதலால் அவர் வாழ்க்கைக்கு மூலாதாரமான பண்ட மாற்றுப் போல் மொழி பண்புற்றிருக்கின்றது. மொழி இயங்கா வழி அவ்வாழ்க்கை இனிது இயங்காது.

“மொழியின் றமையா துலகியல் என்றும்
வழிநின் றதனால் வரும்.”

என்றபடியே உலகம் வழங்கி வருவதை அனுபவத்தில் நாம் கண்டுவருகின்றாேம். மொழி வழங்கல் இல்லையாயின் வாய் பேசா மிருகங்களாய் மானிடங்கள் மாண்பிழந்து படும். பேச்சு வழக்கே மனுக்குலத்தை மாட்சிமைப் படுத்தி வருகின்றது.

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற மக்களுக்குத் தக்க துணை யாய் நின்று சால்புடன் அமைந்து சதுருடன் இயங்கிவரும் மொழி கள் நூல்களானே மேன்மை எய்தி நிற்கின்றன. உயர்ந்த கருத் துக்கள் அமைந்த சிறந்த நூல்களை எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மொழி அடைந்திருக்கின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது தலைமையுடையதாய் நிலவி நிற்கின்றது. தளிர் இலை அரும்பு மலர் காய் கனி தழை கிளை முதலியன தழுவியுள்ள விழுமிய தருக் களைப்போல் பலவகை நூல்களையும் மருவி நிற்கும் மொழிகள் உலகில் பெரிதும் செழித்து ஒளிமிகப்பெற்று உயர்ந்து விளங்கு ன்றன. சால்புடைய நூல்கள் இல்லாத மொழிகள் பட்டமரம் போல் பாழ்பட்டு நிற்கின்றன.

ஒவ்வொரு மொழியிலும் அவ்வக்காலத்தில் இருந்த அறிஞர்கள் தத்தம் அறிவுக்குத் தோன்றிய கருத்துக்களையும் அங்கங்கே நிகழ்ந்த சரித்திரங்களையும் என்றும் எவரும் அறிந்துகொள்ளும்படி எழுதிவைக்கிருக்கிறார்கள். அவைகளே நூல்களாயாண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.