பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியின் பெருமை

21


மக்கள் வாழ்க்கைக்கு இனிய துணையான மொழியை விழுமியதாக்க நூல்கள் விளங்கி நிற்கின்றன. அந்நூல்கள் கவிகளாகவும் வசனங்களாகவும் பணைத்துச் செழித்துப் பலனுதவி வருகின்றன.

வசனமானது இனிய ஓசை முதலிய இயல் நலங்களின்றி அணி வளங்கள் குன்றி ஒரு வரம்பு படாமல் நெகிழ்ந்து சிதைந்து விரிந்து செல்லும் இயல்பினது; செய்யுளோ சுருங்கிய சொல்லில் பெரும் பொருள் அமைந்து, செம்மையும் சீர்மையும் பொருந்தி இன்னோசை இசைந்து, எழில் நலம் கனிந்து, இனிமை தெளிவு முதலிய எல்லா நலங்களும் நிறைந்து இன்பமீதுார்ந்துள்ளது. ஆதலால் ஆதியிலிருந்தே செய்யுளையே அறிஞர்கள் ஆர்வத்துடன் ஆதரித்து வந்துள்ளார். நெஞ்சில் பதிவு செய்யச் செஞ்சொற் கவியே சிறந்த தாகும், அதன் உருவும் செவ்வியும் உயர் வனப்புடன் உணர்வுநலஞ் சுரந்து ஒங்கியுள்ளமையால் கலையுலகம் எங்கணும் அது தலைமை தாங்கியுள்ளது.

கவியின் பெருமை

எந்த மொழியிலும் கவிகளே முந்துறத் தோன்றி முதன்மை எய்தியிருக்கின்றன. ஏடுகளும் எழுதுகருவிகளும் தோன்றுதற்கு எவ்வளவோ காலங்களுக்கு முன்னரே கவிஞர் உள்ளங்களிலிருந்து கனிந்து விளைந்து செவ்விய கவிகள் வெளிவந்துள்ளன. அவற்றை அவ்வக்காலங்களிலிருந்த மக்கள் அதிக ஆர்வத்துடன் மனப்பாடம் செய்து மாண்போடு போற்றி வந்தனர். அவ்வரவு வரன்முறையே வளர்ந்து வந்தது. முதியவர் இளையவர்கட்கும், ஆடவர் பெண்டிர்கட்கும், தந்தையர் மைந்தர்களுக்கும், அம்மைந்தர் அவர் மக்களுக்கும் தம்மனங்கொண்ட பாடல்களை முறையே மொழிந்து வரலாயினர்; அவ்வாறே பரம்பரையாகக் கவிகள் பேணப்பட்டு மனன நிலையில் பெருகிவரலாயின. வரினும் காலதேசங்களின் மாறு பாட்டாலும், சன சமூகத்தின் இடையீட்டாலும் அரசாட்சியின் வேற்றுமையாலும் எத்துணையோ எண்ணிறந்த கவிகள் இறந்து போயின. பின்னர் எழுத்துப் பதிவுகள் வந்து இயன்ற வரையும் பழுது படா வகை அவற்றைப் பாதுகாத்துள்ளன. இருப்பினும் மூல முதலான முன்னைய மனன முறை முழுதும் மறந்து வறிதே ஒழிவுற நேர்ந்தது. புறக்கருவிகள் வளர்ந்து வரவே அகக்கருவிகள் தளர்ந்து போயின.