பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை

காப்பியர், நக்கீரர், திருவள்ளுவர், திருத்தக்கதேவர், உருத்திரங் கண்ணனார், கொங்கு வேளிர், கோவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், அம்மூவனார், அறிவுடைநம்பி, இளம்பெருவழுதி, ஒரம் போகியார், கீரந்தையார், நப்பூதனார், பொன்முடியார், ஒதலாந்தையார், பூங்குன்றனார், மாங்குடி மருதனார், சாத்தனார், இளங்கோவடிகள் முதலிய பழம்பெரும் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், கவித்திறங்களும், உவமை நயங்களும், உள்ளுறை வளங்களும், அவர்கள் உலகினுக்கு உணர்த்தியுள்ள உணர் வுறுதிகளும் எவரும் தெளிவாக எளிதறிந்து இனிது பயனுறும் வகையில் எழுத முயன்றேன்.

அவ்வாறு முனைந்து நிற்றலை நண்பர் சிலரிடம் மொழிந்தேன். அதற்கு அவர், “சங்கத் தமிழ்ச்சுவையினும் கம்பனுடைய காவியச் சுவையையே உலகம் இன்புற முன்னதாக நீங்கள் உதவுதல் வேண்டும்; அதனைப் பின்பு தரலாம்” என்று என்பால் அன்புரிமையுடன் உரைத்தார்.

அன்னாது உரிமையுரையை உள்ளங்கொண்டு முதலில் குறித்த புலவர் உலகம் என்ற தலைமையான அந்நூலின் ஒரு பகுதியாகக் கம்பன் கலை நிலையை இதுபொழுது வெளியிடுகின்றேன்.

முத்தமிழ்ப் புலமையும் வித்தகக் கவித்திறமும் வியனுற வாய்ந்து பரனருளும் தோய்ந்து நிற்றலால் தெய்வப் புலவன் எனவும், கலையுலகில் தலைமைபெற்று யாண்டும் நிலைத்த அதிபதியாய்த் தனிச்செங்கோல் செலுத்தி வருதலால் கவிச்சக்கரவர்த்தி எனவும் இம்பரெல்லாம் புகழக் கம்பர் இலங்கி நிற்கின்றார். இத்தகைய மேதையை உலகம் மீண்டும் பெறுதல் மிகவும் அரிதாம். மலைகளுள் இமயமலை உயர்ந்து நிற்றல் போல் கவிஞர்களுள் கம்பர் சிறந்து விளங்குகின்றார்.

உணர்வொளி பரப்பிக் கலைக்கதிர் விரித்து இலகொளி ஞாயிறாய்க் கலையுலகில் நிலவி நிற்கின்ற கம்பர் தம் புலமை நலம் தோன்றவும், உலகம் நலமுறவும் உரிமையுடன் இயற்றிய நூல் இராமாயணம் என்பது. இராமனுடைய சரிதம் கூறுதலால் அஃது இப் பெயர் பெற்றது. தமது நூலுக்குக் கம்பர் முதலில் இட்ட பெயர் இராமாவதாரம் என்பதே. அவதாரம் என்ற குறிப்பினால் இராமனுடைய அம்புத நிலை புலனாம்!