பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை
5

எந்நிலையிலும் அவன் தன்னிகரில்லாத் தலைவன். அகில மங்கள குணகண வடிவினன்; அழகு அறிவு அருள் அமைதி வாய்மை தூய்மை வண்மை திண்மை அருந்திறலாண்மை பெரும் போர் வீரம் முதலிய உயர் நலங்களெல்லாம் ஒருங்கே குடிகொண்ட பெருந்தகையாளன்; அருங்குலக்குரிசில்; காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் விழுமிய நிலையினன். அந்த அற்புத மூர்த்தியின் அருமைச் சரிதத்தை விற்பன நலம் கனியத் தமிழில் இவர் விளக்கி யிருத்தலால் கம்ப ராமாயணம் அற்புத காவியம் என வந்தது. அது இதிகாசமாயினும் அதிசய அமைதிகளால் ‘பாரகாவியம்’ எனவும், ‘வீரகாவியம்’ எனவும் பாராட்டப்பெறுகின்றது. அதன் அருமையும் பெருமையும் அழகும் இன்பமும் அளவிடலரியன. அலைகளை மறிந்து கொழிக்கும் அமிர்த வாரிதி எனக் கலைகளை விழைந்து கொழித்துப் பேரின்ப நிலையமாய் அது பெருகியுள்ளது.

அதன் ஆழமும் நீளமும் அகலமும் அறிய அறிய அகன்று விரிகின்றன. அறிவானந்தமாய்ப் பரந்து, அரிய கலைகளாகிய பெரிய அலைகளை வீசி, நீள நிமிர்ந்து, நெடிது முழங்கி, நிலையெழுந்தலறி, அறிவுலகில் பெரியதோர் ஆரவாரம் செய்து ஊழியும் பேராத உயர்சுவைக் கடலாய் அது ஒங்கி ஒளிர்கின்றது.

அத்தகைய அரிய பெரிய இனிய நூலின் கனிவுகளை யெல்லாம் யாவரும் எளிதில் நுகர்ந்து இன்புறும்வகையில் இது பண்புற்று வருகின்றது.

கவிகள் தோறும் பொருள் கூறிக் கதைகளை விரியாது, உணர்வு நலம் கனிய உளநயங்களை விளக்கிக் கலைச்சுவைகளையே இந் நூல் தலைப்பெய்துவரும். அவ்வரவு நிலை வரன்முறையே விளைந்தெழுந்து மரபு நிலை தழுவி வளஞ்சுரந்து மணம் பொதிந்து வருவதாகும்.

இராமன்
இலக்குவன்
பரதன்
சத்துருக்கன்
தசரதன்
சுமந்திரன்
சனகன்