உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

புல்லின் இதழ்கள்

யில் சாக்பீஸைத் தடவி, ஏற்றி இறக்கினான்: மசியவில்லை. பிருடை ஓரங்களில் விரல் நுனியால், சிறிது தண்ணீரை நனைத்தான்; சொன்னபடி கேட்டது.

சுசீலா புதிய பட்டு நூலைத் திரித்துக் கொண்டு வந்து, ஹரியின் கையில் கொடுத்தாள். வியப்போடு அவளையே பார்த்தபடி, அதைப் பெற்றுக் கொண்டு, ‘ஜீவா’ கூட்டினான். ‘ஙொய்’ என்று கிளம்பிய கம்பீர நாதம், அவன் மனத்தை நிரப்பியது.

ஹரி, தோல் பெட்டியைக் காலி பண்ணி வைத்தான். அதில் அவனுக்கு வேண்டிய துணிமணிகளையெல்லால் சுசீலாவே, அழகாக அடுக்கி வைத்தாள். பல்பொடியையும், விபூதியையும் இரண்டு சிறிய மூடி போட்ட பாட்டில்களில் போட்டு நிரப்பி வந்து வைத்தாள்.

பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளைப் போல், விபூதியை வெளியே எடுத்தாள். ஹரி எப்போதும் விபூதியை, வாரிப் பூசிக் கொள்ளுகிற வழக்கமுடையவன். அதனால்தான், அது போதாது என்று வேறு ஒரு பெரிய டப்பியில், நிறைய விபூதியைப் போட்டுக் கொண்டு வந்து வைத்தாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமியம்மாளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

வர வரப் பெண்ணின் போக்கு அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது. ‘இதெல்லாம் ஒரு, வேளை ஹரி பாட்டு சொல்லிக் கொடுத்து வந்தானே, அதனால் ஏற்பட்ட குரு பக்தியாக இருக்குமோ? ஆனால், அது என்ன அப்படித் திடீரென்று பொங்கி வழிகிற குரு பக்தி? எப்படியோ ஹரி சௌக்கியமாக இருந்தால் சரி; இப்பொழுதுதான் அவனுக்கு நல்ல தசாபுக்திகள் திரும்பியிருக்கின்றன போலிருக்கிறது. நீடிக்கட்டும்!’ என்று இருந்து விட்டாள் லட்சுமி.