பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை



தென்னகமெங்கும் சிறப்பாக விளையாடப்படுகின்ற ஆட்டமாக விளங்கி வருவது பூப்பந்தாட்டமாகும். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளிலும் கீர்த்திமிக்க ஆட்டமாக, ஆடுவோரை கிளர்ச்சியுள் ஆழ்த்தி வருவதை நாடே அறியும்.

அத்தகைய அரியதோர் ஆட்டத்திற்கு நூல்வடிவில் இதுவரை எந்தவிதமான குறிப்புக்களும் இல்லாமையை நிறைவேற்றும் வண்ணம், இந்த நூலை எழுதியிருக்கிறேன்.

ஒவ்வொரு விளையாட்டிற்கும் (Game) தனித்தனியாக ஒரு நூலை எழுதவேண்டும் என்று முடிவெடுத்து எழுதிவருவதற்கேற்ப, இந்நூல் வெளிவருகிறது. பூப்பந்தாட்டம் இந்தியா முழுமையும் ஆடப்பட்டாலும், சிறப்பாக தமிழ்நாடு, ஆந்திரம், கர்னாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் ஆடப்பட்டு வருகின்றது.

என்றாலும், பூப்பந்தாட்டம் தோன்றியதற்கும், வளர்ந்ததற்குமான ஆதாரங்கள் கிடைக்கப் பெறாமலேயே போயிருக்கின்றன. வாய்வழியாக விதிமுறைகள் வளர்ந்து வந்தது போலவே, வரலாற்றுக் குறிப்புக்களும் பேச்சு வழக்கிலே பேசப்பட்டு காற்றோடு கலந்து போயிருக்கலாம்.