பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பூர்ணசந்திரோதயம்-1 மிகுந்த வியப்பும் பிரமிப்பும் கொண்ட இளவரசர் முதலியோர் அந்த விளக்கு இருந்த இடத்தை நோக்க, அது ஒரு பெருத்த அறையாகத் தோன்றியது. அந்த முரட்டாள்கள் அவர்கள் நால்வரையும் அந்த அறைக்குள் அழைத்துச் சென்றனர். அந்த அறையின் மேல்புறம் தவிர, மற்ற நான்கு பக்கங்களிலும் கறுப்பு நிறப் படுதாக்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஆகையால், அறையின் சுவர்களாவது மற்ற எந்தச் சாமானாவது அவர்களது திருஷ்டிக்குத் தோன்றவில்லை. அவர்கள் யாவரும் அந்த அறைக்குள் நுழைந்தவுடனே அதன் கதவு மூடி உட்புறத்தில் தாளிடப்பட்டது. ஒரே கறுப்பாக இருந்த அந்த விநோதமான இடத்தைக் காண, எதற்கும் அஞ்சாத இளவரசரது நெஞ்சம் திடுக்கிட்டுக் கலங்கியது. மருங்காபுரி ஜெமீந்தார் பெருத்த திகிலினால் கதிகலங்கி நின்றார். சாரதி, காசாரி ஆகிய இருவரும் மற்ற இருவரைக் காட்டிலும் நூறுமடங்கு அதிகமான பீதியில் கலகலத்து நடுநடுங்கி நின்றனர். அவர்கள் கொள்ளைக்காரர்களாக இருந்தால், ராஜபாட்டை யிலேயே தங்களை அடித்துத் தங்களது பொருட்களை யெல்லாம் பறித்துக்கொண்டு போயிருப்பார்களே. அப்படிச் செய்யாமல், அவர்கள் தங்களை இங்கே அழைத்துவர வேண்டிய காரணமென்ன? அவர்கள் திருடர்களல்லவென்றால், வேறு யாராக இருப்பார்கள்? தாங்கள் அப்போது இருந்த அறைமுழுவதும் கறுப்புத் திரைகளால் மறைக்கப்பட்டிருந்த காரணமென்ன? என்ற பலவகையான கேள்விகள் இளவரசர் முதலிய நால்வரது மனத்திலும் பிறந்து கொண்டிருந்தன வானாலும், அவர்கள் எதையும் நிச்சயமாக அறிந்து கொள்ள மாட்டாதவர்களாகத் தவித்து மிகுந்த ஆவலோடு அந்த முரட்டு மனிதர்களது முகங்களைப் பார்த்துக் கொண்டு நின்றனர். உடனே இளவரசர் கட்டாரித் தேவனை நோக்கி, "அடேய் ஆளே வழியோடு போன எங்களை மறித்து நீங்கள் பலவந்தமாக இங்கே கொண்டுவந்த காரணம் இன்னதென இன்னமும் விளங்கவில்லையே?’ என்று வினவ,