பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 67 விட்டுச்சடக்கென்று எழுந்து முறுக்காக நிமிர்ந்து நின்றவளாய்க் கீழ் நோக்கிய பார்வையாகப் பார்த்தவண்ணம், மகாப் பிரபுவே ஆரம்பத்திலிருந்து தாங்கள் என்னைப் பிரமாதமாக ஸ்தோத்திரம் செய்தே பேசிக்கொண்டு வருகிறதன்றி, ஏதோ மனதில் வைத்துக் கொண்டு ஜாடையாக மூடி மூடிப் பேசுகிறீர்கள். தங்களுடைய கருத்து இன்னதென விளங்கவில்லை. தயவு செய்து வெளிப்படையாகப் பேசுங்கள்' என்று அழுத்தமாகவும் நயமாகவும் கேட்கலானாள். உடனே மிட்டாதாரும் எழுந்து நின்ற வண்ணம் தமது மனத்தின் உணர்ச்சிகளையெல்லாம் நன்றாக முகத்தில் புலப்படுத்தி அவளை நோக்கி, 'பெண்ணே உன்னுடைய அழகு எப்பேர்ப்பட்ட அபாயமான அழகென்பதையும், அது ஆண் பிள்ளைகளின் மனசை எவ்வளவு தூரம் உருக்கிக் கருக்குகிறது என்பதையும் நீ கொஞ்சமாவது உணர்ந்திருந்தால், என்னுடைய வார்த்தைகளின் உள் கருத்து இன்னது என்பது உனக்கு ஏற்கெனவே தெளிவுபட்டிருக்கும்' என்று நயமாக மொழிந்தார். அதுகாறும் தரையைப் பார்த்தபடியே பேசிய அந்த உன்னத மங்கை மெதுவாகத் தனது கண்களை உயர்த்தி முறுக்காகவும் அமர்த்தலாகவும் அவரது முகத்தை உற்று நோக்கி, கடுமையாக ஒருதரம் விழித்தாள். அந்தக்கொடிய பார்வை அவரை ஒரே நொடியில் பஸ்மீகரம் செய்துவிடக் கூடியதாக இருந்ததானாலும், மிட்டாதார் பின் வாங்காமல் நின்று மேலும் அவளைப் பார்த்துக் கெஞ்சி மன்றாடிய குரலாகப் பேசத்தொடங்கி, ‘பூர்ணசந்திரோதயம் கோபித்துக்கொள்ளாதே; ஆகா! நீ நிமிர்ந்து நின்று கோபத்தோடு என்னைப் பார்ப்பது, எவ்வளவு சொகுசாக இருக்கிறது தெரியுமா? உன்னைப் பார்த்தால், மண்டலேசுவரருடைய பட்டத்து ராணியோ, அல்லது தேவேந்திர லோகத்திலுள்ள இந்திராணியோ என்று சந்தேகப்படும்படியாக இருக்கிறது.