பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 193

இன்ஸ்பெக்டர், ‘இன்றுமுதலே நான் அந்த வேலையைச் செய்யத் தொடங்குகிறேன். நீங்கள் என்னோடுகூட வரவேண்டு மென்ற அவசியமில்லை. போலீஸ் துப்பு விசாரிப்பதென்றால் தந்திரமாகவும், பிறர் சந்தேகப்படாதபடியும் நடந்து கொள்ள வேண்டும். உங்களை நான் கூடவே அழைத்துக் கொண்டு போனால், ஜனங்கள் பீதி கொண்டு விஷயத்தை வெளியிடாமல் மறைத்துவிடுவார்கள். ஆகையால், நான் தனியாகவே போகிறேன். நீங்கள் வேறே ஏதாவது காரியம் இருந்தால், அதைப் பாருங்கள்’ என்றார்.

நீலமேகம்பிள்ளை, “சரி; உங்களிஷடப்படியே செய்யுங்கள். நான் வீட்டுக்குப் போகிறேன். நான் முதலில் ஜாகையைவிட்டுப் புறப்பட்டு வந்தது, உங்களைப் பார்த்தபிறகு மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகைக்குப் போய் லீலாவதியைக் கண்டு அவளைப் பற்றி தன்தகப்பனார் இந்த உயிலில் எழுதியிருக்கும் விஷயத்தை அவளிடம் தெரிவித்து அவளுக்கு என்னால் ஆகவேண்டிய சகலமான உதவிகளையும் செய்வதாகச் சொல்லி விட்டு வீட்டுக்குப் போகலாமென்று எண்ணிக் கொண்டு வந்தேன். ஷண்முகவடிவின் விஷயத்தில் அந்தக் கிழவர் நடந்து கொண்டதைக் கேட்ட பிறகு அந்த மனிதருடைய ஜாகைக்குப் போக எனக்கு மனமில்லை. நான் நேராக வீட்டுக்கே போகிறேன். அங்கிருந்தபடி கடிதம் எழுதி லீலாவதியை என் ஜாகைக்கு வரவழைத்து அவளிடம் சங்கதியைச் சொல்லிக் கொள்ளுகிறேன்’ என்றார்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் பெரிதும் வியப்படைந்து, ‘நீங்கள் பேசுவதைப் பார்த்தால் சங்கதி உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறதே! என்றார்.

நீலமேகம்பிள்ளை திடுக்கிட்டுத் திகைப்படைந்து, “என்ன சங்கதியை நீங்கள் குறிக்கிறீர்கள்?’ என்றார்.