பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 269 தெரியாது. ஆனால், அந்த சிவபாக்கியத்தைப் பற்றி இந்த அம்மாள் சொல்லும் அவதூறு முற்றிலும் பொய்யானது. அந்தச் சதியாலோசனைக்கு இணங்காமலேயே அவள் வீட்டை விட்டு வந்தாள். எனக்கும் அவளுக்கும் துன்மார்க்கமான சம்பந்தமே கிடையாதென்பதும், நான் கோலாப்பூரில் சிறையில் வைக்கப்பட்டதும் பிரமாணமான விஷயங்கள். எல்லா வற்றிற்கும் மகாராஜா இந்தக் கலியாண முகூர்த்தத்தை இப்போது நடத்தாமல் கொஞ்சகாலம் நிறுத்தி வைத்தால், நான் சொல்வதெல்லாம் உண்மையான வரலாறு என்று திருப்தி கரமாக ருஜூப்படுத்துகிறேன்” என்று அழுத்தமாகவும் உறுதி யாகவும் கூறினான்.

அதைக்கேட்ட இளவரசர் ஏளனமாகப் புன்னகை செய்து, “நீர் சொன்னதெல்லாம் தவறென்பதும் அந்த சிவபாக்கியத்தின் தூண்டுதலின் மேல் நீர் இப்படிச் செய்கிறீர் என்பதும் பரிஷ்காரமாகத் தெரிகிறது. இதில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. இந்த அம்மணிபாயியை நான் சிறு வயதிலிருந்து நன்றாக அறிவேன். இவளுக்குப் பட்டமகிஷியிடத்தில் பகை இருந்ததாகத் தெரியவே இல்லை. அப்படி இருந்தாலும், அவளை நான் விலக்கி வேறு கலியாணம் செய்து கொள்ளும் இந்தப் பெருத்த காரியத்தை நடத்தி வைக்கும் படியான சூழ்ச்சியை இந்த அம்மணிபாயி செய்ய அவ்வளவு கொடிய பகைமை உண்டாக யாதொரு முகாந்திரமும் இல்லை. அந்தப் பட்டமகிஷியை விலக்குவதால் இவளுக்கு யாதொரு லாபமும் இல்லை. ஆகையால், இவள் அவ்வளவு பிரமாதமான காரியம் செய்ய சிறிதும் ஏதுவில்லை. அதுவுமன்றி, நானே நேரில் பூனாவுக்குப் போய் அந்த பட்டமகிஷியின்தேகநிலைமையைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். வேறு எவ்விதமாகவும் நினைக்கக் கூடாதபடி அவ்வளவு தீர்மானமான ருஜூவை நான் என் கண்ணால் கண்டுவிட்டு வந்திருக்கிறேன். அந்த விஷயத்தில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமே இல்லை.