பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 325 உடையவளாக இருப்பதனால், அந்தச் சந்தேகாஸ் பதமான நடத்தை உன் மனசுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது எளிதில் தெரிகிறது. ஆகையால் இதிலிருந்து உன்னுடைய மேன்மை உள்ளபடி வெளியாவதாகவே நான் கொள்ள வேண்டுமன்றி, அதற்காக உன்னை நான் கோபிப்பது நியாயமாகாது’ என்றான்.


பிறகு ஒருநாழிகை சாவகாசம் கழிந்தது. இளவரசர் சபா மண்டபத்தை அடைந்து, அவ்விடத்தில் கூடியிருந்த மகா ஜனங்களை நோக்கி மிகுந்த மலர்ச்சியும் புன்னகையும் தோற்றுவித்தவராய்ப் பேசத் தொடங்கி, “மகாஜனங்களே! நான் சொல்லப்போகும் சந்தோஷ சங்கதியை நீங்கள் கேட்டால் உங்களை இந்நேரம் நான் காக்க வைத்ததைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் ஆயாசப்பட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதுவுமன்றி, கொஞ்சநேரத்துக்கு முன் இருவர் வந்து இந்தக் கலியானத்தைத் தடுத்ததையும், கடைசியில் நான் நீலமேகம் பிள்ளையோடு தனியாகப் போனதையும் கண்டு நீங்கள் நிரம்பவும் கவலை கொண்டிருப்பது சகஜமே. நீங்கள் எதிர் பார்த்துவந்த இன்பமும் சந்தோஷமும் இல்லாமல் போய் விடுமோ என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இப்போது ஒரு கலியாணத்திற்கு இரண்டு கலியாணங்களாக நடக்கப் போகின்றன. ஆகையால் நீங்கள் எல்லோரும் இரட்டிப்பு ஆனந்தமடைந்து இரட்டிப்பு விருந்து சாப்பிடத் தயாராய் இருக்க வேண்டும் ‘ என்று வேடிக்கையாக மொழிந்தார். -

அதைக் கேட்ட ஜனங்கள் மிகுந்த உற்சாகமும் களிப்பும் அடைந்தவராய் அவர் எவ்விதமான புதிய செய்தி சொல்லப் போகிறார் என்று நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்த்தனர்.