பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பூவின் சிரிப்பு

------------------------------

பூ சிரிக்கிறது. ஓயாத சிரிப்பு: மாறாத புன்முறுவல், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணத்தை, நறுமணத்தை அள்ளி வீசுகின்றது. ரீங்காரமிட்டு வரும் வண்டுகளுக்குத் தேனை மோகன இளநகையோடு கொடுக் கிறது. அடடா! அதன் வாழ்வு ஒரே இன்பம். இறுதி வரையில் ஒரே களியாட்டம். அதிலும் காற்றுத் தேவன் வந்து உடலைத் தீண்டிவிட்டால் அதன் இன்ப நடனத்திற்கு முடிவே இல்லை!

அதைப் பார்க்கும்போது உள்ளத்திலே எனக்கு என்னவோ மாதிரி இருக்கிறது. நாமும்தானே படைப்பின் சிகரமாக இந்த மண்ணில் இருக்கிறாேம்? எத்தனை கவலைகள், எத்தனை சலிப்பு, எத்தனை நோய், எத்தனை துன்பம், எத்தனை பொறாமை, பகைமை, எத்தனை பூசல்கள், சண்டைகள், பெரும் போர்!---சே, எண்ணிப் பார்த்தால் நமக்கு அவமானமாக இல்லையா? காலையில் மலர்ந்து மாலையில் சுருங்கி நிலத்தில் விழும் பூவுக்குக்கூட வாழத்தெரிகின்றது; வாழ்க்கையைத் துய்க்கத் தெரிகின்றது. நமக்கு அதன் அறிவுகூட இல்லையா? பிறகு ஏன் இப்படிக் கவலைகளால் வாடுகின்றோம்? ஏன் இப்படி ஒருவரை ஒருவர் நாசஞ் செய்துகொண்டு வாழ்க்கையைப் பேரச்சமாகச் செய்கின்றாேம்? இத்தனை கவலைகள் நமக்கு மட்டும் எங்கிருந்து முளைத்தன? இத்தனை போராட்டம் எதற்காக?

மனிதா, நீ மிக உயர்ந்த அறிவைப் பெற்றிருக்கிறாய், உனக்கு அது தனிச் செல்வம். அதைக்கொண்டு