பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பூவின் சிரிப்பு



சொந்தமோ?' என்று அதைப் பார்த்து நான் கோபமாகப் பேசினேன். என் மனைவி அதைச் செவியுற்றுச் சிரித்துக்கொண்டே வந்தாள். அந்த மணலை எதற்காக அங்கே போட்டு வைத்திருக்கிறீர்கள்?' என்று அவள் பொருள் நிறைந்த குறிப்போடு கேட்டுக் கொண்டே கதவருகில் சென்று நின்றாள். நான் மறு மொழி கூறாததைக் கண்டு அவள் மணல் திடலுக்குச் சென்று எண்ணமிட்டுக் கொண்டே அமர்ந்தாள்.

இந்த வீடு யாருக்குத் தான் சொந்தம்? குருவிகள் தங்களுடைய உடைமையென்று கருதிக் களிக்கின்றன. பல்லி சொந்தம் கொண்டாடுகிறது. இது என்னுடைய வீடல்லவா? இவைகளுக்கு என்ன திமிர் இவ்வாறு நான் எண்ணக்கடலில் மூழ்கிக் கிடந்தேன்.

குடக்கூலி கொடுத்து நாங்கள் குடியிருந்த வீட்டிலும் இந்த உயிர்வகைகள் இல்லாமலில்லை. பாவம், அடைக்கலாங் குருவி கூடு கட்டி வாழட்டும் என்று நான் அன்று பரிவோடு எண்ணியிருந்தேன். ஆனால் உடைமை என்கின்ற எண்ணம் வந்தவுடன் என் போக்கே மாறிவிட்டது. என் உள்ளத்திற்கு இயல்பான மகிழ்ச்சியும் மங்கிவிட்டது. உடைமை என்கின்ற எண்ணத்திற்கே மகிழ்ச்சியையும், மனநிறைவையும் போக்கடிக்கும் தன்மை உண்டோ? அந்த உடைமையைப் பறிகொடுக்காமல் காக்கவேண்டும் என்ற கவலை உள்ளத்தின் ஆழத்திலே பிறக்குமோ? என்னால் திட்டமாகச் சொல்ல முடியவில்லை.

நாம் சொந்தம் பாராட்டுகின்ற ஒவ்வொரு பொருளும் உண்மையிலே நமக்குச் சொந்தமில்லையா? வேதாந்திகள் கூறுவதுபோல உடைமை என்கின்ற எண்ணமே மாயையா? உடைமையென்பதெல்லாம் பொய்த் தோற்