48
பூவையின் சிறுகதைகள்
தேவன் வருகை கிழவியை மலைக்கச் செய்தது. அவன் சுற்று வட்டாரத்தில் பசையான ஆசாமி, கிழவியுடன் கூடப் பிறந்தவன். பர்மா, மலேயா, கண்டி இதெல்லாம் அவனுக்குத் தண்ணிர் பட்ட
பாடு.
செல்லியும் மாசிமலையும் உடன் பிறப்பில் ஒட்டிக் கொண்டார்களே தவிர, இயற்கையில் அவர்கள் ஒட்டவில்லை. சில மனத் தாங்கல்கள் கடைசியில் செல்லியின் கணவன் இறந்த சடங்கில் ராசியானான் தேவன்.
"அக்கா, ஒங்கிட்ட ஒரு சேதி கேட்கலாமின்னு வந்தேன். எம் பெண்சாதி செத்து வீடே வெறிச்சோடிக்கிடக்குது, மறுபடியும் வீட்டிலே விளக்கு ஏத்தி வைக்க மனசிலே ஆசை துள்ளுது. அதுக்கு நம்ப பவளக்கொடியை எனக்குக் கொடுத்துட்டா எம்பிட்டோசீரா வச்சிருப்பேன்."
தேவன் இப்படிப் பேசினான்.
கிழவிக்குத் தூக்கிவாரிப் போட்டது.
பவளம் கதவைப் படீரென்று சாத்தினாள்.
ஆக மூன்று உள்ளங்களிலிருந்தும் நீண்ட பெருமூச்சுப் புறப்பட்டது: -
"என்னா அக்கா, ரொம்ம யோசனை செய்யிறே. இடம் தேடி வருகுது சீதேவி. வார கிழமை நல்ல நாள்; பரிசம் போட்டுடலாம்."
கிழவி திரும்பவும் சிலையானாள்.
"அக்கா, என்ன பதிலே பேசல்லே. பவளக்கொடி அந்தப்பயல் நடேசனைக் கையிலே போட்டுக்கலாமின்னு நினைச்சிருக்கும். விதி யாரை விட்டுச்சு? இல்லாத போனா அந்த அனாதைப் பய செத்திருப்பானா? ஹாம்; முடிவான சொல் இது. உன் மகள் எனக்குத்தான். அதுக்கு ஏற்பாடு செஞ்சுத்தான் ஆகணும்."
கணத்தில் வில் வண்டி பறந்தது. அதிகாரம் வரிசை செலுத்தப் பேசிச் சென்ற தம்பியின் உத்தரவைக் கேட்டுச் சொல்லி பிரமித்தாள்; சுவர் ஒண்டலில் நின்றிருந்த பவளக்கொடி வாய் விட்டுக் கதறினாள்.